கோவை: மண் வளம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் உலக மண் தினம், ஒவ்வொரு ஆண்டும் டிச. 5-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக உலக மண் தினமான வியாழக்கிழமை 364 ஏக்கர் பரப்பளவில், 1 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 33 மாவட்டங்களின், 51 விவசாய நிலங்களில், விவசாயிகள் மற்றும் தன்னார்வலர்களால் இம்மரக்கன்றுகள் நடப்பட்டன.
மண்வளத்தை பாதுகாப்பதில் காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் மண்காப்போம் இயக்கம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமானது விவசாய நிலங்களில் டிம்பர் மரங்களை நடுவதாகும், இதன் மூலம் நதி நீர் மீட்டெடுப்பு, விவசாயிகளின் வருவாய் அதிகரித்தல், மண்வள மேம்பாடு போன்ற பயன்கள் விவசாயிகளுக்கு ஏற்படுகின்றது. மேலும், மண்வளப் பாதுகாப்புக்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஈஷா தொடர்ந்து நடத்தி வருகிறது.
ஈஷா இதுவரை தமிழகம் மற்றும் கர்நாடகாவில் ஏறக்குறைய 12 கோடி மரங்களை விவசாயிகளுக்கு விநியோகித்துள்ளது. கடந்தாண்டு தமிழகத்தில் மட்டும் விவசாய நிலங்களில் 1,01,42,331 மரங்கள் நடப்பட்டுள்ளன. நடப்பாண்டு தமிழகத்தில் 1.21 கோடி மரங்கள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 85 லட்சத்திற்கு மேற்பட்ட மரங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. படிப்படியாக தமிழகம் மற்றும் கார்நாடக விவசாய நிலங்களில் 242 கோடி மரங்களை நடுவதற்கு ஈஷா திட்டமிட்டுள்ளது.
இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள 40 ஈஷா நர்சரிகளில் டிம்பர் மரக்கன்றுகள் வெறும் ரூ.3-க்கு வழங்கப்படுகிறது. மேலும், சத்குரு தனது எக்ஸ் தள பக்கத்தில், “மண்ணிலிருந்தே பிறந்தோம். மரணத்தின் போதும் மண்ணால் தழுவப்படுகிறோம். மண் அழிந்தால் உயிர்கள் அழியும்” என பதிவிட்டுள்ளார்.