சென்னை: குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் ஜன்னல் மேற்கூரை இடிந்து விழுந்து இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் நீதி கேட்டு அவரது உறவினர்களும், பொதுமக்களும் பட்டினப்பாக்கம், சாந்தோம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னை பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பின் 6-வது பிளாக்கில் வசித்து வந்தவர் சையத் குலாப் (23).
எலக்ட்ரீஷியனான இவர் பாரிமுனையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணி செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வழக்கம்போல் வீடு திரும்பினார். இரவு 9.30 மணியளவில் வீட்டருகே வந்தபோது, அக்குடியிருப்பின் 134-வதுபிளாக் மூன்றாம் தளத்தில் ஜன்னல் மேற்கூரை (சிமென்ட் ஸ்லாப்) இடிந்து சையத் குலாப் தலையில் விழுந்தது. பலத்த காயம் அடைந்த அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு ராயப்பேட்டைஅரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பரிசோதித்த மருத்துவர்சையத் குலாப் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து பட்டினப்பாக்கம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், குலாப்பின் மரணத்துக்கு நீதி கேட்டும் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், புதிய குடியிருப்புகளை அதே இடத்தில் கட்டித்தர நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தி அவருடைய உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் என சுமார் 300-க்கும்மேற்பட்டோர் பட்டினப்பாக்கம் சிக்னல் சாந்தோம் நெடுஞ்சாலையில் நேற்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து பட்டினப்பாக்கம் போலீஸார், மயிலாப்பூர் எம்எல்ஏ வேலு, மயிலாப்பூர் காவல் மாவட்ட துணை ஆணையர் ஹரிஹர பிரசாத், மாநகராட்சி மற்றும் நகர்புற மேம்பாட்டு வாரியஅதிகாரிகள் அங்கு விரைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை சுமூகமாக முடியவே அனைவரும் கலைந்து சென்றனர். இப்போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் திட்டப்பகுதியில் 1965-77 ஆண்டு வரை 6.20 ஹெக்டேர் பரப்பளவில் 1,356 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டன.
கடந்த 60 ஆண்டு கால பயன்பாட்டாலும் தட்ப வெட்ப மாறுப்பாட்டாலும் கட்டிடம் சிதலமடைந்த நிலையில் இருந்தது. இக்கட்டடங்களை அகற்றி, மறுகட்டுமானம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதை நிறைவேற்றும் வகையில் 2022 ஜன.20 முதல் மார்ச் 9 வரை குடியிருப்புகளை காலி செய்ய வாரியத்தால் அறிவிப்பாணைகள் வழங்கப்பட்டது.
ஆனால், பொதுமக்கள் மற்றும் கிராம மீனவர் சபையினருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் குடியிருப்பை காலி செய்வதில் சுமுக தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார்.
அவரது குடும்பத்துக்கு அரசின் சார்பில் ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன் ரூ.5 லட்சம் நிவாரண நிதி வாரியத்தால் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து சிதலமடைந்த குடியிருப்புகளை காலி செய்து தரும் பட்சத்தில் பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு வாரியத்தால் புதிய குடியிருப்புகள் கட்டித்தரப்படும். இடைப்பட்ட காலத்துக்கு ஒரு குடும்பத்துக்கு ரூ.24 ஆயிரம் கருணைத் தொகையாக வழங்கப்படும் என்று தெரித்துள்ளார்.