சென்னை: ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.
மழைக் காலங்களில் ஏற்படும் தொற்று நோய்களிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில், சுகாதாரத் துறை மூலம் மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டுவருகின்றன. அத்துடன், தற்காலிக மறுசீரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க, முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு, தனது ஒரு மாத ஊதியத்துக்கான காசோலையை தலைமை செயலர் நா.முருகானந்தத்திடம் வழங்கினார். தமிழக அரசுநேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.