சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல, நாளை முதல் வரும் 10-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும், 11-ம் தேதி சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை.
» தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகளுக்கு பிப்ரவரி முதல் புதிய பாடத்திட்டம்
» மசூதிகளுக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும்: சர்வதேச இந்துக்கள் மாநாட்டில் தீர்மானம்
தமிழகத்தில் டிச. 5-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் 12 செ.மீ. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி யில் 6 செ.மீ. ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம், திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர், திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஆகிய இடங்களில் 5 செ.மீ. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி. சென்னை ஆலந்தூர் ஆகிய இடங்களில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.