இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 14 பேர் கைது; 2 படகுகள் பறிமுதல்

By KU BUREAU

ராமேசுவரம்: எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி ராமேசுவரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 600 விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர். பிரிட்டோ, மெஜோ ஆகியோருக்குச் சொந்தமான 2 விசைப்படகுகளில் சென்ற 14 மீனவர்கள் நேற்று அதிகாலை மன்னார் மாவட்ட கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி, மீனவர்கள் ரிபாக்சன், ராஜபிரபு, அரவிந்த், ராபின்ஸ்டன், முனீஸ்வரன், பிரசாந்த், ஆரோக்கியம், பெட்ரிக் நாதன், யோபு, ஜான் இம்மரசன், அருள் பிரிட்சன், நிஷாத், வினித், அந்தோணி லிஸ்பன் ஆகிய 14 பேரைக் கைது செய்தனர். மேலும், இரு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 14 மீனவர்களையும் வரும் 19-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி ரபீக் உத்தரவிட்டார். இதையடுத்து 14 பேரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE