நாகர்கோவில்: நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் கழிப்பறையை மூடியதால் ஓட்டுநர்களும், நடத்துநர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் அவதியடைந்தனர்
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் பயன்படுத்தும் கழிப்பறை உள்ளது. போதிய பராமரிப்பின்றி இந்த கழிவறை கிடந்ததால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் நிலவியது. இந்நிலையில் போதிய முன்னேற்பாடு இன்றி கழிவறையை சீரமைப்புப் பணி மேற்கொள்வதற்காக அதிகாரிகள் மூடியுள்ளனர். இதனால் பேருந்து ஓட்டுநர்களும், நடத்துநர்களும் அவற்றை பயன்படுத்த முடியாமல் கட்டண கழிப்பறைக்கு செல்லும் சூழல் இன்று ஏற்பட்டது.
இதனால் பாதிக்கப்பட்ட ஓட்டுநர்களும், நடத்துநர்களும் இன்று பகலில் பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்துகளை எடுக்காததால் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாயினர். பின்னர் அங்கு வந்த போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ஓட்டுநர், நடத்துநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கழிப்பறையை விரைவில் சீரமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாகவும், அதுவரை மாற்று ஏற்பாடு செய்து கொடுப்தாகவும் உறுதி அளித்தனர். இதன் பின்னர் நடத்துநர்களும், ஓட்டுநர்களும் மீண்டும் பணியை தொடர்ந்தனர். நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் இந்த போராட்டத்தால் பயணிகள் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் பாதிக்கப்பட்டனர்.
» கோயில் நிர்வாகம் தொடர்பான வழக்கை உரிமையியல் நீதிமன்றம் விசாரிக்க முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு