கோவை: காக்கி உடையில் எத்தனை வருடம் இருப்பாய். அதன்பின்னர் இறங்கித் தானே ஆக வேண்டும். நாங்கள் இங்கேயேதான் இருப்போம். மோதுவோம் என்றாகி விட்டது, வா மோதுவோம் என வருண்குமார் ஐபிஎஸ்-சுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.
சண்டிகரில் நடந்த ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான 5ஆவது மாநாட்டில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்றனர் . பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இந்த மாநாட்டை தொடங்கி வைத்தனர். இதில் கலந்து கொண்ட திருச்சி எஸ்.பி வருண்குமார், "எனது குடும்பம் இணையதள மிரட்டல் , சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்பட்டிருந்தது. நாம் தமிழர் இயக்கம் கண்காணிக்கப்பட வேண்டிய ஒரு பிரிவினைவாத இயக்கம். அக்கட்சியால் நானும் என்னுடைய குடும்பத்தினரும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறோம். இது குறித்து 2 எப்ஐ ஆர் பதிவு செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை . அது போல் இணையதளத்தில் அவர்கள் போட்ட பதிவுகளை நீக்க கோரியும் அவை நீக்கப்படவில்லை" என்று அவர் பேசியது தற்போது அரசியல் களத்தில் பரபரப்பாக மாறியுள்ளது.
இதுபற்றி கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், ‘தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து 13 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியை நடத்தி வருகிறோம். தேர்தலில் நின்று 36 லட்சம் வாக்குகளை பெற்று, மூன்றாவது தனிப்பெரும் கட்சியாக நாம் தமிழர் கட்சி உள்ளது. வருண்குமார் ஐபிஎஸ் நீண்ட நாள்களாக கண்காணித்து கொண்டுதான் இருக்கிறார். புதிதாக எதுவும் சொல்லவில்லை.
இவர் நாட்டை ஆளுகிறாரா... எதை வைத்து பிரிவினைவாதிகள் என்று சொல்கிறார். அடிப்படை தகுதி இல்லாமல் அவர் எப்படி ஐபிஎஸ் ஆனார். தமிழ், தமிழர் என்பது பிரிவினைவாதமா?. தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை செய்ததே, அப்பொழுது பிரிவினை இயக்கம் என்பது தெரியாதா?. உன் தாய் மொழி எது. உண்மையான தமிழ் தாய்க்கும், தந்தைக்கும் பிறந்திருந்தால் தமிழ் தீவிரவாதிகள் என்ற வார்த்தையை சொல்லி இருப்பாரா?. உனக்கு மட்டும் தான் மனைவி, குழந்தை உள்ளதா, எங்களுக்கு இல்லையா?. பேசும் போது பார்த்து பேச வேண்டும். அந்த மாநாட்டில் பலரும் பேசிய நிலையில், இவர் பேசியது மட்டும் எப்படி வெளியே வருகிறது. இதுபற்றி விசாரிக்க வேண்டும். வேலையில் சேர்ந்து உறுதிப்பிரமாணம் எடுத்த பொழுது இப்படித்தான் எடுத்தாரா?இதுதான் உன் வேலையா. என் கட்சியை குறை சொல்ல தான் ஐபிஎஸ் ஆனாரா.
இந்த காக்கி உடையில் எத்தனை வருடம் இருப்பாய். அதன்பின்னர் இறங்கித் தானே ஆக வேண்டும். நாங்கள் இங்கேயேதான் இருப்போம். மோதுவோம் என்றாகி விட்டது.. வா மோதுவோம்” என்று தெரிவித்துள்ளார்
» காஞ்சிபுரம்: இளையனார் வேலூர் முருகன் கோயிலில் குடமுழுக்கு விழா - பக்தர்கள் பரவசம்
» குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணம் - டோக்கன் கொடுக்கும் பணிகள் தொடங்கியது!