பாரத் நெட் திட்டத்துக்கு தடை ஏற்படுத்தினால் குற்றவியல் நடவடிக்கை பாயும்: கோவை ஆட்சியர் எச்சரிக்கை

By இல.ராஜகோபால்

கோவை: பாரத் நெட் திட்டத்தின்கீழ் கோவை மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகளில் 221 ஊராட்சிகளில் இணைய வசதி வழங்க தயார் நிலையில் உள்ளது என்றும் திட்டத்துக்கு தடை ஏற்படுத்தும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ''கோவை மாவட்டத்திலுள்ள 228 கிராம ஊராட்சிகளிலும், இணையதள வசதி வழங்கும் பாரத் நெட் திட்டம் தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் தற்போது முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மின்கம்பங்கள் மூலமாகவும், தரை வழியாகவும் இணைக்கப்படுகிறது. இதுவரை கோவை மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகளில் 221 ஊராட்சிகளில் இணைய வசதி வழங்கிட தயார் நிலையில் உள்ளது. இத்திட்டத்திற்கான உபகரணங்கள் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம ஊராட்சி சேவை மையம் அல்லது அரசு கட்டிடத்தில் நிறுவப்பட்டு அறை, சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவரால் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

சிலர் தங்களுக்கு சொந்தமான நிலங்களில் கண்ணாடி இழை கொண்டு செல்லக் கூடாது என தடை ஏற்படுத்துகின்றனர். இத்திட்டம் முழுமையான அரசின் திட்டம். மக்கள் தடை செய்ய கூடாது. விளைநிலங்களில் உள்ள மின் கம்பங்களின் வழியாக கண்ணாடி இழைகள் இணைக்கப்படும் போது பயிர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.

கண்ணாடி இழையில் எந்தவிதமான உலோக பொருட்களும் இல்லை, ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் வசிக்கும் மக்கள் அனைவரும் இணையதள வசதிகளை பெற முடியும். மேற்கண்ட உபகரணங்களை சேதப்படுத்தும் அல்லது திருடும், கண்ணாடி இழைகளை துண்டாக்கும் மற்றும் மின்கம்பங்கள் வழியாக கொண்டு செல்ல தடைசெய்யும் நபர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது.'' இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE