அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு: நீதிமன்றம் கூறுவது என்ன?

By KU BUREAU

நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், ஓபிஎஸ் உள்ளிட்ட அனைவரது கருத்துகளையும் கேட்டு 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டுமென இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘அதிமுகவில் நிலவும் உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சியின் விதிகளுக்கும், சட்ட திட்டங்களுக்கும் எதிராக சிலர் நடந்து கொண்டது குறித்தும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 2017 முதல் 2022 வரை பல்வேறு புகார் மனுக்களை அனுப்பியுள்ளேன். அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக நான் தொடர்ந்துள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என வலியுறுத்தி தேர்தல் ஆணையத்துக்கு நான் அளித்த மனுவுக்கு இதுவரை எந்த பதிலும் வரவில்லை. எனவே இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு நான் அளித்துள்ள மனு மீது உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், மனுதாரர் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு அளித்த மனு மீது, அதிமுகவுக்கு நோட்டீஸ் அனுப்பி பதில் வாங்கியுள்ளோம். விரைவில் இதுதொடர்பாக முடிவெடுக்கப்படும் என்றார்.

அப்போது இந்த வழக்கில் எதிர்மனுதாரராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எச்.அரவிந்த் பாண்டியன், வழக்கறிஞர் சி.திருமாறன் ஆகியோர், இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில் தங்களது தரப்புக்கு தேர்தல் ஆணையம் எந்தவொரு நோட்டீஸையும் இதுவரையிலும் அனுப்பவில்லை. இந்த வழக்கில் நாங்களும் எதிர்மனுதாரர்களாக இருக்கும்போது கண்டிப்பாக எங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி, எங்களது கருத்துக்களையும் கோர வேண்டும். அதன்பிறகே இரட்டை இலை சின்னம் தொடர்பாக எந்த முடிவையும் எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டனர்.

அதையேற்ற நீதிபதிகள், இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக உள்ள ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைவரது கருத்துகளையும் கேட்டு 4 வாரங்களில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக உரிய முடிவெடுக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE