அரையாண்டுத் தேர்வு அட்டவணையில் மாற்றமில்லை: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

By KU BUREAU

பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட மாட்டாது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

நூலகத் துறை சார்பில் 446 ஊர்ப்புற நூலகர்களுக்கு 3-ம் நிலை பதவி உயர்வு வழங்கியதற்காக நன்றி தெரிவித்தல் மற்றும் பாராட்டு விழா சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேசுகையில், ``சென்னையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சி இப்போது தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது. இந்த கண்காட்சிகளில் ரூ.69 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. வாசிப்பை ஓர் இயக்கமாக மாற்ற நினைத்து இதை முன்னெடுத்து வருகிறோம்'' என்று தெரிவித்தார்.

தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசும்போது, ``ஒரு தலைமுறையை உருவாக்கும் பொறுப்பு பள்ளிக்கல்வித் துறைக்கு உள்ளது. அதேபோல், அறிவுசார்ந்த ஒரு சமுதாயத்தை உருவாக்கக் கூடிய பொறுப்பு நூலகத் துறைக்கு உள்ளது. நூலகங்களுக்கும், நூலகர்களுக்கும் உரிய மரியாதையை தமிழக அரசு கொடுத்து வருகிறது. நியாயமான கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் முதல்வரிடம் கொண்டு சென்று தீர்வுகளைக் காண்போம்'' என்றார்.

விழா முடிந்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஸ் நிருபர்களிடம் கூறியதாவது: மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மட்டும் செய்முறைத் தேர்வு நடத்த முடியவில்லை. அந்தப் பகுதிகளில் ஜனவரி மாதம் நடத்தி முடிக்க அறிவுறுத்தியுள்ளோம். அதே நேரம் அரையாண்டு தேர்வு அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை. அதிக பாதிப்பால் தேர்வை நடத்த முடியாத நிலையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் அரையாண்டு தேர்வு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும். மாணவர்களின் பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம். தலைமை ஆசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அது முடிந்ததும் அந்த காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE