படகு நிறைய மீன்களுடன் கரை திரும்பிய பாம்பன் விசைப்படகு மீனவர்கள்!

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: பாம்பனில் விசைப்படகு மீனவர்கள் 10 நாட்களுக்கு பிறகு கடலுக்கு மீன்பிடிக்க சென்று புதன்கிழமை திரும்பினர். தொடர்ந்து நடைபெற்ற மீன் ஏல விற்பனையில் வியாபாரிகள் போட்டி, போட்டு மீன்களை வாங்கி சென்றனர்.

வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயலினால் ராமநாதபுரம் மாவட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் நவம்பர் 24 முதல் கடலுக்குச் செல்ல வில்லை. புதுச்சேரிக்கு அருகே ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பாம்பன் விசைப் படகு மீனவர்கள் மன்னார் வளைகுடா கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று புதன்கிழமை காலை முதல் பாம்பன் மீன்பிடி இறங்குதளத்திற்கு திரும்பத் தொடங்கினர்.

10 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு சீலா, நகரை, பாறை, ஊளி, சூடை, கட்டா, திருக்கை, முக்கனி போன்ற விலை உயர்ந்த மீன்கள் உள்பட ஒவ்வொரு படகுக்கும் சுமார் 250 கிலோ முதல் 500 கிலோ வரையிலும் மீன்கள் கிடைத்தன. அதைத்தொடர்ந்து மீன்கள் ஏலம் விடும் கூடத்துக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு சிறிய ரக மீன்கள், பெரிய ரக மீன்கள் மற்றும் உயர ரக மீன்கள் என தனித்தனியாக பிரித்து ஏலம் நடந்தது. வியாபாரிகள் மீன்களை போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். சீலா மீன் அதிகப்பட்சம் ஒரு கிலோ ரூ.900-க்கும், பாறை மீன் ஒரு கிலோ ரூ.300-க்கும், திருக்கை மீன் ஒரு கிலோ ரூ.80க்கும் விற்பனையானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE