ஆசியாவிலேயே குளத்துடன் உள்ள வில்லியனூர் தேவாலயத்தின் நூற்றாண்டு குள சுற்றுச்சுவர் சேதம்

By KU BUREAU

புதுச்சேரி: ஆசியாவிலேயே குளத்துடன் உள்ள வில்லியனூர் தேவாலயத்தின் குளத்தின் நூறாண்டு சுற்றுச்சுவர் புயல் மழையால் முழுமையாக சேதம் அடைந்துள்ளது.

வில்லியனூர் மாதா திருத்தலம் புதுச்சேரியில் இருந்து மேற்கே விழுப்புரம் செல்லும் சாலையில் சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.1858ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில், மசபியேல் என்ற குகையில் பெர்னதெத் என்ற சிறுமிக்கு மேரி மாதா காட்சி கொடுத்தார். அதன் நினைவாக, லூர்துநகரில், தேவாலயம் கட்டப்பட்டது. அங்கு வீற்றிருக்கும் அன்னை மேரி, லூர்து மாதா என்று அழைக்கப்படுகிறார்.

எனவே, லூர்து மாதா பெயரில் வில்லியனூரில் தேவாலயம் கட்ட முடிவு செய்யப்பட்டது. 1877, ஏப்ரல் 4 அன்று ஆலயத்தின் கட்டுமான வேலைகள் முடிவடைவதற்கு முன்பாகவே பிரான்ஸ் நாட்டில் இருந்து பெரிய பெட்டியில் லூர்து அன்னையின் சொரூபம் கப்பல் மூலமாகப் புதுச்சேரிக்குக் கொண்டுவரப்பட்டது. ஆசியாவிலேயே, குளத்துடன் அமைந்துள்ள தேவாலயம், வில்லியனூரில் மட்டும்தான் உள்ளது.

ஆரம்ப காலத்தில், கற்களால் கட்டப்பட்டிருந்த இந்தக் குளத்தின் கரைகள், 1923ஆம் ஆண்டில், செங்கற்களால் கட்டப்பட்டன. 1924ஆம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டில் இருந்து லூர்து அன்னையின் சொரூபம் வரவழைக்கப்பட்டு குளத்தின் மையப் பகுதியில் உள்ள தூண் மீது வைக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டில், லூர்து நகரில் மாதா காட்சி கொடுத்தபோது, அங்குள்ள சுனையில் உற்பத்தியான புனித நீர் இந்தக் குளத்தில் ஆண்டுதோறும் கலக்கப்படுகிறது.

தற்போது புதுச்சேரியில் புயல் மழையால் வில்லியனூர் மாதா கோயில் குளம் முழுவதும் முதல்முறையாக நிரம்பியது மட்டுமில்லாமல் அதன் சுற்று சுவரும் இடிந்து விழுந்தது. மாதா கோயில் பக்தர்கள் இச்சுவர் இடிந்து விழுந்ததால் துயர் அடைந்துள்ளனர். நூறாண்டு பழமையான இச்சுற்றுச்சுவரில் பல இடங்களில் விரிசல் அதிகளவில் உள்ளது. பல இடங்களில் சுவரும் விழுந்துவிட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE