சாத்தனூர் அணை விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் பொய்கள் விலை போகாது: அமைச்சர் துரைமுருகன்

By KU BUREAU

சாத்தனூர் அணையின் நிலை குறித்து 5 முறை வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்ட பிறகே படிப்படியாக நீர் வெளியேற்றப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சியினர் அவதூறு பரப்பி வருகின்றனர் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையில் இருந்து முன்னறிவிப்பு இல்லாமல், திடீரென விநாடிக்கு 1.68 லட்சம் கனஅடி தண்ணீரை வெளியேற்றியதால் 4 மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர் என உண்மைக்கு மாறான தகவல் பரப்பப்படுகிறது.

ஃபெஞ்சல் புயல் காரணமாக நீர்பிடிப்புப் பகுதிகளில் பெரும் மழைப்பொழிவு இருந்ததால் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து, அணையின் முழு கொள்ளளவான 119 அடியை நெருங்கியது. தண்ணீர் வரத்தை முன்கூட்டியே கணித்து, அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வந்த தண்ணீர், தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது.

சாத்தனூர் அணையின் உதவி செயற்பொறியாளர், அணைக்கு வரும் நீரின் அளவை தொடர்ந்து கண்காணித்து அவ்வப்போது எச்சரிக்கைகளையும் செய்து வந்தார். அது அரசின் கவனத்துக்கு வந்து, உடனே முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டன. பெருமழை தொடர்ந்து பெய்ததைத் தொடர்ந்து நீர்வரத்து அதிகமானதால் 5-வது வெள்ள அபாய எச்சரிக்கை டிச.2-ம் தேதி முற்பகல் 2.45 மணிக்கு விடப்பட்டு விநாடிக்கு 1,80,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

ஆனால், அதிகப்படியான மழையின் காரணத்தைப் புரிந்து கொள்ளாமல் எதிர்க்கட்சியினர் பொய்யான தகவலைப் பரப்புகின்றனர். பெரு மழையால் சாத்தனூர் அணைக்கு ஆபத்து ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு செயல்பட்டது.

5-வது முன்னெச்சரிக்கை அளவாக விநாடிக்கு 1,80,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டதற்கான காரணத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 4-வது மற்றும் 5-வது முன்னெச்சரிக்கை விடப்பட்ட இடைப்பட்ட நள்ளிரவு நேரத்தில் கணிக்க முடியாத அளவுக்கு அணைக்கு நீர் வந்து கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் அணையில் இருந்து 1,80,000 கனஅடி தண்ணீரை திறந்துவிடாமல் போயிருந்தால், அணைக்கு பெரிய ஆபத்து ஏற்பட்டு 7 டி.எம்.சி தண்ணீரும் வெளியேறியிருக்கும். அதனால் ஏற்படும் பாதிப்புகள் எல்லாம் கணக்கில் அடங்காது. ஆறாத துயரமாக அது மாறியிருக்கும்.

பெருமளவில் ஏற்பட இருந்த உயிர் இழப்புகளை மிகச் சாதுரியமாக செயல்பட்டு, மக்களை அரசு பாதுகாத்திருக்கிறது என்பதை நீர் மேலாண்மை, அணை பாதுகாப்பியல் வல்லுநர்களுக்கு புரியும். நிலைமையை அரசு சரியாகக் கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டதால்தான் பெரும் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டன. வீடுகள், விவசாய நிலங்கள் மட்டுமேதான் வெள்ள நீரில் மூழ்கியது.

இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் உயிர்கள் விஷயத்திலும் எதிர்க்கட்சிகள் மனசாட்சியை அடகு வைத்துவிட்டு அவதூறுகளை மட்டுமே அள்ளி வீசுகின்றன. பொய்கள் என்றுமே விலை போகாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE