டிச.18-ம் தேதி திமுக தலைமை செயற்குழு கூட்டம்: நிர்வாக மாற்றங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என தகவல்

By KU BUREAU

திமுகவின் தலைமை செயற்குழு கூட்டம் டிச.18-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இதில், நிர்வாக ரீதியிலான மாற்றங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படுவதோடு, தேர்தல் தொடர்பான பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

திமுகவில் தற்போது உள்ள நிர்வாக ரீதியிலான மாவட்டங்களை, 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரு மாவட்டம் என்ற வகையில் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையும், அதில் இளைஞரணியின் பிரதிநிதித்துவமும் அதிகரிக்கும் என திமுகவினர் கருதுகின்றனர். ஆனால், இதற்கு செயற்குழு, பொதுக்குழுவில் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது.

இதற்கிடையே, திமுகவின் பொதுக்குழு கூட்டத்தை, திருச்சியில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், வரும் டிச.18-ம் தேதி காலை 10 மணிக்கு திமுகவின் தலைமை செயற்குழு கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறுவதாகவும், கழக ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, திமுக நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘திமுகவில் நிர்வாக ரீதியாக மாற்றம் செய்யப்படும்போது, அதற்கு செயற்குழுவில் ஒப்புதல் பெறப்பட வேண்டும். தற்போதுள்ள சூழலில் தேர்தல் பணிகள் தொடர்பாக ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் ஒப்புதல் பெறப்படும். அத்துடன், கட்சியின் ஆக்கப்பணிகள் மற்றும் தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து ஆலோசிக்கப்படும். இந்த தலைமை செயற்குழு கூட்டத்தில் மாவட்ட வாரியாக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 400 பேர் பங்கேற்பார்கள்’’ என்றார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE