திறக்கப்பட்ட 3 மாதங்களிலேயே தென்பெண்ணை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலம்

By KU BUREAU

திருவண்ணாமலை: தென்​பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்​கால், திறக்கப்​பட்ட 3 மாதங்​களி​லேயே உயர்​மட்ட பாலம் அடித்​துச் செல்​லப்​பட்டது.

திரு​வண்ணாமலை மாவட்டம் சாத்​தனூர் அணையி​லிருந்து முன்னறி​விப்​பின்றி நேற்று முன்​தினம் அதிகாலை விநாடிக்கு 1.68 லட்சம் கனஅடி தண்ணீர் வெளி​யேற்​றப்​பட்​டது. இதனால், தென்​பெண்ணை ஆற்றில் வெள்​ளப்​பெருக்கு ஏற்பட்டு திரு​வண்ணா​மலை, கள்ளக்​குறிச்சி, விழுப்பு​ரம், கடலூர் ஆகிய 4 மாவட்​டங்​களில், நூற்றுக்​கணக்கான கிராமங்கள் பாதிக்​கப்​பட்டன.

இந்நிலை​யில், தண்ட​ராம்​பட்டு அருகே தென்​பெண்ணை ஆற்றின் குறுக்கே அகரம்​பள்​ளிப்​பட்டு-தொண்​ட​மானூர் கிராமத்தை இணைக்​கும் உயர்மட்ட பாலம் நேற்று முன்​தினம் வெள்​ளத்​தில் அடித்​துச் செல்​லப்​பட்​டுள்​ளது. நெடுஞ்​சாலைத் துறை சார்​பில் ரூ.15.90 கோடி​யில் 7 மீ. உயரம், 12 மீ. அகலம், 250 மீட்டர் நீளத்​தில், 12 கண்களு​டன்​கட்​டப்​பட்ட இந்தப் பாலம் கடந்த செப். 2-ம் தேதி திறக்​கப்​பட்டது குறிப்​பிடத்​தக்​கது.

இதுகுறித்து கிராம மக்கள் கூறிய​தாவது: எங்களது நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்​றப்​பட்ட மகிழ்ச்சி 3 மாதங்​கள்கூட நீடிக்க​வில்லை.

தென்​பெண்​ணை​யில் கடந்த காலங்​களில் திறந்து விடப்​பட்ட அதிகபட்ச தண்ணீர் மற்றும் எதிர்​காலத்​தில் அதி கனமழை பெய்​தால் அணையில் வெளி​யேற்​றப்​படும் தண்ணீரின் அளவு ஆகிய​வற்றை கணக்​கீடு செய்​யாமல் கட்டி​யுள்​ளனர். இதனால், ஒருமுறை வந்த வெள்​ளத்​துக்கே தாக்குபிடிக்க முடி​யாமல் பாலம் அடித்து செல்​லப்​பட்​டுள்​ளது. தரமான முறை​யில் பாலம் கட்டப்​பட்டதா என்று சந்தேகம் எழுகிறது. எனவே, வல்லுநர் குழு ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது தொடர்பாக நெடுஞ்​சாலைத் துறை தலைமைப் பொறியாளர் செ.தேவ​ராசு (நபார்டு மற்றும் கிராம சாலைகள்) வெளி​யிட்டுள்ள செய்திக்​குறிப்​பில், “நீரி​யியல் கணக்​கீட்​டின்படி பாலத்​தின் நீர்​வெளி​யேற்றம் 54,417 கனஅடி​யாகும். புயல் காரணமாக சாத்​தனூர் அணையில் இருந்து தென்​பெண்​ணை​யாற்றில் விநாடிக்கு 2 லட்சம் கனஅடிக்​கும் கூடு​தலாக தண்ணீர் வெளி​யேற்​றப்​பட்​ட​தால், பாலத்​தின் மேற்​பரப்​பில் 4 மீட்டர் உயரத்​தில் தண்ணீர் சென்​றுள்​ளது. தண்ணீரின் அதிக வேகம் காரணமாக பாலம் சேதமடைந்து, போக்கு​வரத்து துண்​டிக்​கப்​பட்​டுள்​ளது” என்று தெரி​வித்​துள்ளார்.

மக்களுக்கு அறிவிக்​காமல்… நீர்​வளத் துறை 1.68 லட்சம் கனஅடி நீர் வெளி​யேற்​றப்​பட்​டதாக தெரிவிக்​கப்​பட்​டிருந்த நிலை​யில், 2 லட்சம் கனஅடிக்கு கூடு​தலாக தண்ணீர் வெளி​யேற்​றப்​பட்டதே காரணம் என்று நெடுஞ்சாலைத் துறை தெரி​வித்​துள்ளது மக்களிடையே பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்​தி​யுள்​ளது.

புயலின் தாக்கம் தீவிரமாக இருக்​கும் என வானிலை மையம் எச்சரித்த பிறகும், சாத்​தனூர் அணையின் நீர்​மட்​டத்​தைக் குறைக்​காமல் பராமரித்துள்ளனர். ஒரே நேரத்​தில் அணையில் இருந்து 2 லட்சம் கனஅடிக்​கும் கூடு​தலாக தண்ணீர் திறக்​கப்​பட்​ட​தால் 4 மாவட்​டங்​களில் பா​திப்பு ஏற்பட்டுள்​ளது. மேலும், 2 லட்​சம் க​னஅடிக்கு கூடு​தலாக தண்​ணீர் ​திறக்​கப்​பட்டது குறித்து மக்​களுக்கு அறிவிக்க​வில்லை என்​பதும் குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE