வடகிழக்கு பருவமழை தீவிரம்: தமிழகத்தில் டிச. 9 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

By KU BUREAU

தமிழகத்தில் வரும் 9-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடதமிழக உள்பகுதிகளில் நேற்று முன்தினம் காலை நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (ஃபெஞ்சல்) மாலை காற்றழுத்த தாழ்வு பகுதியாக வடதமிழகம் மற்றும் தெற்கு கர்நாடக உள்பகுதிகளில் நிலவியது. இது நேற்று காலை கடலோர கர்நாடக பகுதிகள் மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவியது.

இதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 9-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 87.8-89.6 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 77-78.8 டிகிரி பாரன்ஹீட் அளவில் இருக்கும்.

லட்சத்தீவு மற்றும் அதையொட்டிய பகுதிகள், தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக் கடலின் தெற்குப் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் வரும் 7-ம் தேதி வரை மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கரூர் மாவட்டம் தோகைமலையில் 13 செ.மீ. மழை, கிருஷ்ணராயபுரம், ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர், திருப்பத்தூர், சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE