புதுச்சேரியில் முழுவதும் நிரம்பிய 80 ஏரிகள் - படுகை அணைகளும் நிரம்பின!

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரியில் உள்ள 84 ஏரிகளில் 80 ஏரிகள் முழுவதும் நிரம்பி விட்டன. வெள்ளத்தால் படுகை அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன.

புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயல் காரணமாக கடும் மழை பொழிவு ஏற்பட்டது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு 50 செ.மீ மழை அளவு பதிவானது. இதுதான் இதுவரையிலான அதிகப்பட்ச மழையாகும். இந்நிலையில் அணைகள் திறப்பால் புதுச்சேரியில் நீர்வரத்து அதிகரித்து கிராமப் பகுதிகளில் பல கிராமங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. சங்கராபரணி, தென்பெண்ணை ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதால் புதுச்சேரியின் பெரிய ஏரியான ஊசுடு ஏரி நிரம்பி வருகிறது. பாகூர் ஏரி முழு கொள்ளளவை எட்டவுள்ளது.

காட்டேரிக்குப்பம் ஏரி, சுத்துக்கேணி பெரிய ஏரி, தொண்டமாநத்தம் வெள்ளேரி மற்றும் கடப்பேரி, முருங்கப்பாக்கம் ஏரி, ஒழந்தை ஏரி, அபிஷேகப்பாக்கம் ஏரி, மணமேடு ஏரி, கிருமாம்பாக்கம் ஏரி, உச்சிமேடு ஏரி, மேல்பரிக்கல்பட்டு ஏரி, அரங்கனூர் ஏரி, கணகன் ஏரி, வேல்ராம்பட்டு ஏரி ஆகியவை நிரம்பி விட்டன. பல இடங்களில் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. அதேபோல் படுகை அணைகளும் பல இடங்களில் தெரியாத வகையில் தண்ணீர் வழிந்தோடுகிறது.

புதுச்சேரியில் உள்ள ஏரிகள் நிலைத் தொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனிடம் கேட்டதற்கு, "புதுச்சேரியில் மொத்தம் 84 ஏரிகள் உள்ளன. அதில் 80 ஏரிகள் முழுவதும் நிரம்பி விட்டன. 3 ஏரிகள் 90 சதவீதம் கொள்ளளவை எட்டியுள்ளன. ஒரு ஏரி 80 சதவீதம் கொள்ளளவை எட்டியுள்ளது. புதுச்சேரியில் 27 படுகை அணைகள் உள்ளன. அதில் ஒரு அணை உடைந்து கட்டப்படவுள்ளது. மீதமுள்ள 26 படுகை அணைகளும் நிரம்பிவிட்டன. சித்தேரி அணைக்கட்டும் நிரம்பிவிட்டது" என்று அமைச்சர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE