மதுரை: மாநகராட்சிகளில் முதல் முறையாக மதுரையில் ‘ஆன்லைன்’ முறையில் சொத்து வரி நிர்ணயம் செய்யும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. விண்ணப்பித்த 3 நாளிலேயே, சொத்து வரி நிர்ணயம் செய்து மக்கள் பயனடையலாம் என அதிகாரிகள் நம்பிக்கை கூறியுள்ளனர்.
தமிழக முழுவதும் மாநகராட்சிகளில் வீடு கட்டுவதற்கு ‘ஆன்லைன்’ முறையில் கட்டிட அனுமதி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ‘ஆன்லைன்’ முறை என்பதால், இடைத்தரகர்கள் இன்றி மக்கள் எளிதாக, கட்டிட அனுமதி பெறுகிறார்கள். அதனால், மாநகராட்சிகளுக்கும் வருவாய் அதிகரித்துள்ளது. மதுரை மாநகராட்சியில், ‘ஆன்லைன்’ கட்டிட அனுமதி மட்டுமில்லாது, ‘ஆன்லைன்’ முறையில் வருவாய் இனங்களை டெண்டர் விடும் நடைமுறையும் தொடங்கப்பட்டுள்ளது.
ஆணையர் தினேஷ்குமாரின் இந்த நடவடிக்கைக்கு வியாபாரிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அடுத்தகட்டமாக, சொத்து வரி நிர்ணயம் செய்யும் நடைமுறையும் ‘ஆன்லைன்’ முறையில் விரைவில் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது: "வரிகள் தான் மாநகராட்சியின் முதன்மையான வருமான ஆதாரம். மாநகராட்சியால் வசூலிக்கப்படும் சொத்து வரியை கொண்டு சாலைகள், கழிவுநீர் வடிகால் அமைக்க மற்றும் தெரு விளக்குள் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு சொத்து உரிமையாளரும் சொத்து வரியை ஆண்டுதோறும் அல்லது ஆண்டிற்கு இரண்டு முறை செலுத்திக் கொள்ளலாம். தற்போது வீடு அல்லது கட்டிடம் கட்டி முடித்தப் பிறகு, கட்டிட உரிமையாளர், சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகத்தில் நேரடியாக சென்று ஆஃப் லைனில் சொத்து வரி நிர்ணயம் செய்யக்கோரி விண்ணப்பிக்க வேண்டும்.
அந்த கட்டிடத்தை, பில் கலெக்டர், உதவி வருவாய் அலுவலர் நேரடியாக சென்று பார்வையிடுவார்கள். தேவைப்பட்டால் மண்டல உதவி ஆணையரும் ஆய்வு செய்வார். அதன் பிறகு அந்த கட்டிடத்தை பில் கலெக்டர்கள் அளந்து, அந்த கட்டிடம் அமைந்துள்ள ‘கிரேடு’ பகுதிக்கு தகுந்தவாறு சொத்து வரி நிர்ணயம் செய்வார்கள். 3 ஆயிரம் சதுர அடிக்குள் கட்டிடம் இருந்தால், மண்டல அளவில் இந்த முறையில் சொத்து வரி நிர்ணயம் செய்வார்கள்.
3,000 சதுர அடி முதல் 4,500 சதுர அடி வரையுள்ள கட்டிடங்களுக்கு மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள வருவாய் உதவி ஆணையர் ஆய்வு செய்து சொத்து வரி நிர்ணயம் செய்வதற்கு உத்தரவிடுவார். 4,500 சதுர அடிக்கு மேல் 10,000 சதுர அடி வரை உள்ள கட்டிடங்களை மாநகராட்சி துணை ஆணையர் ஆய்வு செய்து சொத்து வரி நிர்ணயம் செய்து உத்தரவிடுவார். 10,000 சதுர அடிக்கு மேல் உள்ள கட்டிடங்களை மாநகராட்சி ஆணையர் பார்வையிட்டு ஆய்வு செய்து சொத்துவரி நிர்ணயம் செய்ய உத்தரவிடுவார். இந்த முறையில் சொத்து வரி நிர்ணயம் செய்வதற்கு 15 நாட்கள் முதல் 1 மாதம் வரை எடுத்துக் கொள்கின்றனர்.
வெளிப்படை தன்மை இருக்காது. சில பில் கலெக்டர்கள், உதவி வருவாய் அலுவலர்கள், விண்ணப்பத்தை வாங்கி கையில் வைத்துக் கொண்டு, சொத்து வரி நிர்ணயம் செய்யாததற்கு காரணங்களையும், கதைகளையும் சொல்வார்கள். யார் கையில் விண்ணப்பம் இருக்கிறது என்பதை கட்டிட உரிமையாளர்களுக்கு தெரியாது. பில் கலெக்டர் முதல் மண்டல உதவி ஆணையர் வரை ‘கவனித்தால்’ மட்டுமே சொத்து நிர்ணயம் செய்யப்படுவது எழுதப்படாத விதிமுறையாக மாநகராட்சியில் இருந்து வருகிறது.
மாநகராட்சி ஆணையாளரே, சொத்து வரி நிர்ணயம் கோரி வந்த விண்ணப்பங்கள் நிலையை கேட்டால், பில் கலெக்டர்கள், உதவி வருவாய் அலுவலர்கள், விண்ணப்பங்கள் நிலையை குறைத்துக் கூட கணக்கு காட்டலாம். இந்த குறைபாடுகளை போக்கவே ஆன்லைன் முறை கொண்டு வரப்பட உள்ளது. ஆன்லைனில், விண்ணப்பம் யார் கையில் இருக்கிறது, எத்தனை நாட்கள் தாமதம், விண்ணப்பித்து எத்தனை நாட்கள் ஆகிறது போன்ற விவரங்களை மாநகராட்சி ஆணையாளரும், விண்ணப்பம் செய்தவரும் ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்.
அதனால், விண்ணப்பங்களை அதிக நாட்களில் வருவாய்த்துறை அதிகாரிகள் தாமதம் செய்ய முடியாது. ஒரிரு நாளிலேயே, சொத்து வரி நிர்ணயம் செய்துவிடலாம். முதற்கட்டமாக 3 நாளில் சொத்து வரி நிர்ணயம் செய்வதற்கு இலக்கு நிர்ணயம் செய்து, ஆன்லைனில் சொத்து வரி நிர்ணயம் திட்டம் தொடங்கப்படுகிறது” என்று வருவாய்த்துறை அதிகாரிகள் கூறினர்.