ஓவியர், சிற்பிகளுக்கு அரசின் பரிசு: கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட கலைஞர்களுக்கு வாய்ப்பு 

By இல.ராஜகோபால்

கோவை: கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த ஓவிய, சிற்ப கலைஞர்கள் தங்களின் படைப்புகளை சமர்ப்பித்து தேர்வு செய்யப்பட்டால் ரொக்க பரிசு பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 'தமிழ்நாடு அரசின் கலைபண்பாட்டுத்துறை, நமது நாட்டின் பாரம்பரிய கலைகளையும், பண்பாட்டையும், கலைப்பண்புகளையும் மேம்படுத்தவும், பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞர்களின் கலைத்திறனை சிறப்பிக்கும் வகையில் கலைப்பயிற்சிகள், கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் மற்றும் கண்காட்சிகளை நடத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஓவிய சிற்ப கலையை வளர்த்திடும் நோக்கில் அக்கலையில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்குவிக்க ஓவிய, சிற்பக்கலைக் கண்காட்சியை மண்டல அலுவலகங்களில் நடத்த திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது. கோவை மண்டல கலை பண்பாட்டு மையத்திற்குட்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள ஓவியர்கள் மற்றும் சிற்பக்கலைஞர்களின் படைப்புகளை சந்தைப்படுத்திடவும், காட்சிப்படுத்திடவும், ஓவிய சிற்ப கண்காட்சி நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஓவிய, சிற்ப கண்காட்சிக்கு கலைஞர்கள் தங்களது மரபுவழி, நவீனபாணி ஓவியங்கள், தஞ்சாவூர் ஓவியங்கள் மற்றும் அனைத்து வகையான சிற்ப படைப்புகளை அனுப்ப வேண்டும். ஓவிய, சிற்பக்கலைப் படைப்புகள் அனைத்தும் மண்டல கலைபண்பாட்டு மைய உதவி இயக்குநர் அளவில் ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டு தேர்வு செய்யப்படும். முதல் பரிசாக 7 கலைஞர்களுக்கு தலா ரூ.5,000, இரண்டாம் பரிசாக 7 கலைர்களுக்கு தலா ரூ.3,000/- மூன்றாம் பரிசாக 7 கலைர்களுக்கு தலா ரூ.2,000 மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

கோவை மண்டல கலை பண்பாட்டு மையத்திற்குட்பட்ட மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள ஓவியர்கள் மற்றும் சிற்பக் கலைஞர்கள் தங்கள் கலைப்படைப்புகளை ஏ4 அளவு வண்ணப் புகைப்படம் (நபர் ஒருவருக்கு அதிகபட்சம் 5 படைப்புகள்) எடுத்து சுயவிவரக்குறிப்புடன் உதவி இயக்குநர், மண்டல கலை பண்பாட்டு மையம், அரசு இசைக் கல்லூரி வளாகம், மலுமிச்சம்பட்டி (அ), கோவை- 641050 என்ற முகவரிக்கு டிசம்பர் 10-ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 0422 – 2610290, 94422 13864 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.' இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE