கோவை: இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் முதிர்வுத் தொகை பெற ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பித்து வைப்பு நிதிப் பத்திரம் பெற்று 18 வயது பூர்த்தியடைந்த பயனாளிகள், ஊரகப் பகுதியில் உள்ளவர்கள் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள சமூகநல விரிவாக்க அலுவலர், மகளிர் ஊர்நல அலுவலர்களை நேரில் சென்று முதிர்வுத் தொகையினை பெற்றுக்கொள்ளலாம்.
இதற்கு வைப்பு நிதிப் பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும். அதே போல் நகர்ப்புற பகுதியில் உள்ளவர்கள், அந்தந்த பகுதியில் உள்ள மண்டல அலுவலகங்களில் உள்ள சமூக நலவிரிவாக்க அலுவலர், மகளிர் ஊர்நல அலுவலர்களிடம் ஒப்படைக்கலாம். நேரில் செல்லும்போது 18 வயது நிறைவடைந்த பெண் குழந்தையின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பயனாளியின் தனி வங்கிக் கணக்கு புத்தக நகல், வைப்பு நிதிப் பத்திரம் அசல், நகல் ஆகிய ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும், மண்டல அலுவலகங்களிலும் நேரில் சென்று, முதிர்வுத் தொகைக்கான கருத்துரு சமர்ப்பித்து பயன்பெறலாம்’ இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.