மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் நிவாரணம்: பனையூருக்கு அழைத்து வழங்கினார்!

By KU BUREAU

சென்னை: ஃபெஞ்சல் புயலால் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டி.பி. சத்திரம் மக்களை, பனையூரில் உள்ள தவெக அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து தவெக தலைவர் விஜய் நிவாரணம் வழங்கினார்.

ஃபெஞ்சல் புயலால் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி,கிருஷ்ணகிரி, கடலூர், சேலம் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அரசின் சார்பிலும், பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பிலும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில், கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டி.பி. சத்திரம் மக்களை, பனையூரில் உள்ள தவெக அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து தவெக தலைவர் விஜய் நிவாரணம் வழங்கியுள்ளார். 250 குடும்பங்களுக்கு இந்த உதவி வழங்கப்பட்டதாக தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் திருவண்ணாமலை நிலச்சரிவு துயரம் குறித்து பதிவிட்டிருந்தார். அதில், ‘திருவண்ணாமலை தீப மலையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்ததில், புதையுண்ட மூன்று வீடுகளில் சிக்கியவர்கள் சடலமாக மீட்கப்பட்டச் செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது. உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

கடந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி, தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களின் உயிரைக் காக்கும் பேரிடர் மீட்புப் படையினரின் அர்ப்பணிப்புடன் கூடிய பணி என்பது அளப்பரியதாகும். இருப்பினும் புயல், மழை, வெள்ளப் பெருக்கு ஆகிய காலங்களில் மத்திய, மாநில அரசுகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, அதிக அளவில் ஆபத்து நேரிட வாய்ப்புள்ள பகுதிகளில் பேரிடர் மீட்புப் படைகளைத் தயார் நிலையில் வைத்திருப்பது அவசியமாகும்.

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, பெரம்பலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அங்கு மலையடிவாரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களையும், ஆற்றங்கரையோரம் வசிப்பவர்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைத் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்திருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE