முழுமையாக நிரம்பி கடல் போன்று காட்சி தரும் அமராவதி அணை - பாசன விவசாயிகள் மகிழ்ச்சி

By எம்.நாகராஜன்

உடுமலை: நடப்பாண்டில் 4.5 டிஎம்சி நீரை உபரியாக வெளியேற்றிய நிலையிலும், முழுமையாக நிரம்பி கடல் போல் காட்சிதரும் அமராவதி அணையால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை 90 அடி உயரமும், 4 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது. இதன் மூலம் 55,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து பாயும் சின்னாறு, தேனாறு, கேரள மாநிலத்தில் இருந்து வரும் சிலந்தி ஆறு, பாம்பாறு ஆகியவை முக்கிய நீராதாரங்களாக உள்ளன. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாகவே அணையின் நீர் மட்டம் குறையாமல் பாசனத்துக்கு தேவையான நீர் மற்றும் குடிநீர் தேவைக்கும் விநியோகித்த பின்பும் அணையின் நீர் மட்டம் குறையாமல் இருப்பது பாசன விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: அமராவதி அணை பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனம் மூலம் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இதன் மூலம் அதிகளவில் கரும்பு, வாழை, நெல், தென்னை, மக்காச்சோளம் மற்றும் பயறு வகைகள், காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன.

முன்பு ஆண்டு தோறும் அமராவதி அணை ஒரு கட்டத்தில் வறட்சியை எட்டிவிடும். அந்த சமயங்களில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படுவதுண்டு. கரூர், தாராபுரம் பகுதி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக அமராவதி ஆறு உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அணையின் நீர் மட்டம் குறையாமல், பலமுறை அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்ட சம்பவங்களால் விவசாயத்துக்கும், குடிநீர் தேவைக்கும் தடையின்றி தண்ணீர் கிடைப்பது மகிழ்ச்சிக்குரியது. தற்போதும் அணை அதன் முழு கொள்ளளவில் இருப்பதும், நடப்பாண்டு மற்றும் அடுத்த ஆண்டுக்கான பாசன தேவை மற்றும் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்யும் வகையில் உள்ளது’ என்றனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது,’ அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கிடைத்த மழையால் அணை அதன் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் உபரி நீர் திறக்கப்பட்டது. அந்த வகையில் அதிகபட்சமாக விநாடிக்கு 24,000 கன அடி வரை 9 மதகுகளின் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டது. நடப்பாண்டில் 4.5 டிஎம்சி நீர் உபரியாக மட்டும் வெளியேற்றப்பட்டது.

இது அணையின் முழு கொள்ளளவை காட்டிலும் அரை டிஎம்சி நீர் அதிகமாகும். கடந்த சில ஆண்டுகளாகவே குடிநீர் மற்றும் பாசனம் என இரு அத்தியாவசிய தேவைகளுக்கும் தடையின்றி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களிலும் இதே நிலை நீடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றனர்.முழுமையாக நிரம்பி கடல் போல காட்சி தரும் அமராவதி அணை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE