தமிழகத்தில் 2026-ல் நடக்க இருப்பது ‘வாழ்வா, சாவா’ தேர்தல். மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். எனவே, தொண்டர்கள் களத்தில் வேகமாக உழைக்க வேண்டும் என்று கமலாலயத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் கல்வி படிப்பதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி லண்டன் புறப்பட்டு சென்றார். 3 மாத படிப்பை நிறைவு செய்த அவர், கடந்த 1-ம் தேதி சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், நேற்று கமலாலயம் வந்த அண்ணாமலைக்கு, மேள தாளங்கள் முழங்க, பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆளுயர மாலை அணிவித்தும், மலர் கிரீடம் சூட்டியும் அவருக்கு கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது, தொண்டர்களிடம் அண்ணாமலை பேசியதாவது: சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், கடலூர், புதுச்சேரியில் மழை, வெள்ளத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அடுத்த ஒரு வார காலத்துக்கு களத்தில் நமது பணி தேவைப்படுகிறது. 3-ம் தேதி (இன்று) முதல் நானும் களமிறங்குகிறேன். கட்சியின் மூத்த தலைவர்களுடன் இணைந்து மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க உள்ளேன். பாதிக்கப்பட்ட மக்களின் நிலை குறித்து மத்திய அரசுக்கும், பாஜக தேசிய தலைவர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்பதால், மூத்த நிர்வாகிகள் அனைவரும் தற்போது டெல்டா பகுதிகளுக்கு செல்கின்றனர்.
» மதவாதம் எனும் நஞ்சினை தமிழக மக்கள் ஒருகாலமும் உண்ண மாட்டார்கள்: அண்ணாமலைக்கு தவெக பதிலடி
பாஜக நிர்வாகிகள் அனைவரும் கடந்த 3 மாத காலமாக அமைப்பு பணிகளில் மிகுந்த கவனம் செலுத்தினீர்கள். புதியவர்கள் ஏராளமானோரை கட்சியில் சேர்த்தீர்கள். வரலாறு காணாத அளவுக்கு பாஜகவில் உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். முன்பு இருந்ததைவிட உறுப்பினர் எண்ணிக்கை 8 மடங்கு அதிகரித்துள்ளது. இன்னும் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. கடுமையாக உழைத்த அனைவருக்கும் எனது பாராட்டுகள்.
தமிழக அரசியல் களத்தை பொருத்தவரை, 2026 தேர்தல் என்பது ‘வாழ்வா, சாவா’ தேர்தல். மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். நமக்கு நேரம் இல்லை. எனவே, அனைவரும் களத்தில் வேகமாக உழைக்க வேண்டும். சமூக வலைதளத்தில் ஹெச்.ராஜா பதிவிட்ட கருத்து தொடர்பாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம். அவருக்கான நீதி நிச்சயம் கிடைக்கும். பாஜக முழுமையாக அவருக்கு துணை நிற்கும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில துணை தலைவர்கள் கரு.நாகராஜன், டால்பின் ஸ்ரீதர், ஏ.ஜி.சம்பத், மாநில செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்