ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்த ‘ஃபெஞ்​சல்’: 15 மாவட்​டங்​களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

By KU BUREAU

சென்னை: வட தமிழகத்​தின் உள்பகு​தி​யில் நிலவிய ‘ஃபெஞ்​சல்’ புயல், ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வுப் பகுதியாக வலு குறைந்​துள்ளது. இதன் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்​கரை​யில் 50 செ.மீ. அளவுக்கு அதிக​னமழை கொட்​டியது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: வடதமிழகம் மற்றும் புதுச்​சேரி பகுதி​களில் நேற்று முன்​தினம் நிலவிய “ஃபெஞ்​சல்” புயல், அன்று பிற்​பகல் ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறைந்​தது. தொடர்ந்து, மாலை​யில் காற்​றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்​தது. இந்நிலை​யில், நேற்று ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வுப் பகுதியாக மேலும் வலுகுறைந்து, வடதமிழக உள்பகுதி​களில் நிலவு​கிறது. இது, இன்று காலை தென்​கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்​கடல் பகுதி​களில் நிலவக்​கூடும்.

இதன் காரணமாக பல்வேறு இடங்​களில் அதிக​னமழை பெய்​துள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்​தில் அதிகபட்​சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்​கரை​யில் 50 செ.மீ, விழுப்புரம் மாவட்டம் கெடாரில் 42 செ.மீ, சூரப்​பட்​டில் 38 செ.மீ, தருமபுரி மாவட்டம் அரூரில் 33 செ.மீ, விழுப்புரம் மாவட்டம் முண்​டி​யம்​பாக்​கம், கோலியனூர், கள்ளக்​குறிச்சி மாவட்டம் திருப்​பாலபந்தல் ஆகிய இடங்​களில் தலா 32 செ.மீ, கள்ளக்​குறிச்சி மாவட்டம் மடம்​பூண்​டி​யில் 31 செ.மீ, விழுப்புரம் மாவட்டம் முகையூர், வளவனூர் ஆகிய இடங்​களில் தலா 30 செ.மீ மழை பதிவாகி​யுள்​ளது.

தமிழகத்​தில் இன்று பெரும்​பாலான இடங்​களி​லும், நாளை ஒருசில இடங்​களி​லும், 5 முதல் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்​களி​லும் புதுச்​சேரி, காரைக்​கால் பகுதி​களி​லும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்​யக்​கூடும்.

அதேபோல், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்​கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்​பூர், திண்​டுக்​கல், தேனி, மதுரை, திருச்சி, பெரம்​பலூர் மற்றும் திருப்​பத்​தூர் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்​ளது.

தென்​தமிழக கடலோரப் பகுதி​கள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்​கடல் பகுதி​களில் இன்று மணிக்கு 35 முதல் 55 கி.மீ வேகத்​தில் சூறாவளிக் ​காற்று வீசக்​கூடும். எனவே இப்​பகு​தி​களுக்கு மீனவர்​கள் செல்ல வேண்​டாம், இவ்​வாறு செய்திக்​குறிப்​பில் கூறப்​பட்​டுள்​ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE