ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் அனைத்து சமூகத்தினரும் பங்கேற்க கோரிய வழக்கு: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

By என்.சன்னாசி

மதுரை: ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் அனைத்து சமூகத்தினரும் பங்கேற்க கோரிய வழக்கில் அரசு செயலர்கள் 3 வாரத்தில் நடவடிக்கை எடுக்க, உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மதுரை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொது நல வழக்கில் கூறியிருப்பதாவது: "மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை. பல்வேறு தடைகளுக்கு பிறகும் போராடி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெற்ற நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிக்கான கவனம் கூடியது. புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் அனைத்து தரப்பினரும் தங்களது காளைகளை அவிழ்க்க வாய்ப்பு வழங்குவதில்லை.

உதாரணமாக ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் ராஜசேகரின் காளைகள் 3 ஜல்லிக்கட்டுகளிலும் அவிழ்க்கப்படும். ஆனால் பதிவு செய்தவர்களின் பட்டியலில் அவரது பெயர் இடம் பெறவில்லை. இதுவே, ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அவிழ்ப்பதில் முறைகேடு இருப்பதை உறுதிப் படுத்துகிறது. அதுபோல அதிக மதிப்புள்ள பரிசுகள் ஜல்லிக்கட்டு போட்டிகளில் வழங்குவதால் காளைகளை பிடிக்க அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்குவதில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

எனவே, இதனை முறைப்படுத்த மூன்று ஜல்லிக்கட்டுகளில் ஏதேனும் ஒரு ஜல்லிக்கட்டு போட்டியில் மட்டுமே ஒரு காளையோ அல்லது ஒரு வீரரோ பங்கேற்க முடியும் என்ற நிலையை உருவாக்க வேண்டும். விலை உயர்ந்த பரிசுகளை வழங்காமல் விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமான பரிசுகளை வழங்க வேண்டும். விழா ஒருங்கிணைப்புக் குழுவில் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்க வாய்ப்பு அளிக்க வேண்டும். இதை நடைமுறைப்படுத்தக் கோரி அதிகாரிகளிடம் மனு அளித்த நிலையில், இதுவரையிலும் எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

2025ம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டியில் பாகுபாடுகளை களைந்து அனைத்து காளைகளும், வீரர்களும் பங்கேற்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டு விழா குழுவில் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பங்கேற்பதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், அரசு தரப்பில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது விலை உயர்ந்த பரிசுகளை வழங்கக்கூடாது என உத்தரவிட வேண்டும்" என்று வழக்கில் கூறியிருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் அமர்வு, "மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக, தமிழக வருவாய்த் துறை மற்றும் கால்நடைத் துறை செயலர்கள் 3 வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE