சேலம்: சேலம் மாவட்டம் முழுவதும் பெய்து வரும் மழையால் ஆனைவாரி நீர் வீழ்ச்சியில் குளிக்க வனத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். புயல் காரணமாக சேலம் மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு தினங்களாக மழை பெய்து வருகிறது. சேலம் மாநகரம், புறநகர் பகுதி சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நீர் நிலைகளில் நீர் இருப்பு அதிகரித்துள்ளது. வசிஷ்ட நதியில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதையடுத்து கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஆத்தூர் அருகே உள்ள ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. எனவே நீர் வீழ்ச்சியில் குளிக்க வனத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். ஏற்காட்டில் அதிகபட்சமாக 144.4 மிமீ மழை அளவு பதிவாகியுள்ள நிலையில், பனி மூட்டத்தின் காரணமாக வெளியிடங்களுக்கும், பணிக்கும் செல்ல முடியாத நிலையில் மக்கள், தொழிலாளர்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். மேலும் ஏற்காட்டின் பல இடங்களில் மழை காரணமாக மரங்கள் சாய்ந்து விழுந்தன. அவற்றை அகற்றும் பணியில், நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர். மழையால், ஏற்காட்டில் பல கிராமங்களில் மின் தடை ஏற்பட்டது.
மழை காரணமாக ஞாயிறு விடுமுறை தினமான நேற்று, ஏற்காடு, ஆனைவாரி, குரும்பப்பட்டி, மேட்டூர் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி வெறிச்சோடின. சேலம் மாநகரில் பெய்து வரும் தொடர் மழையால் பாதாள சாக்கடைகள் நிரம்பி சாலைகளில் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட சாலைகள் சேறும், சகதியுமாக காட்சியளிக்கின்றன. மாவட்டம் முழுவதும் பெய்து வரும் மழையால் குளுமையான சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளது.
விமான சேவை ரத்து: சேலம் காமலாபுரத்தில் விமான நிலையம் உள்ளது. சென்னையில் இருந்து சேலத்துக்கும், சேலத்தில் இருந்து சென்னைக்கும் விமான சேவை உள்ளது. அதேபோல, சேலத்தில் இருந்து பெங்களூரு, ஹைதராபாத்துக்கும், சேலத்தில் இருந்து பெங்களூரு, கொச்சிக்கும் விமான சேவை உள்ளது. இந்த விமான சேவைகள், நேற்று பெய்த தொடர் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டன.
» அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் - புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு