தென்காசி: ஆதார் என்பது ஒவ்வொரு தனி நபரின் தனித்துவமான அடையாளத்தை நிறுவும் நோக்கத்துக்காக இந்திய அரசாங்கத்தின் சார்பில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம், தனிநபர்களுக்கு வழங்கிய தனிப்பட்ட அடையாள எண் ஆகும்.
இந்தியாவில் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாக செயல்படும் ஆதார் அட்டை அரசின் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. ஆதார் அட்டை பெற்று 10 ஆண்டுகள் ஆனவர்கள் அதனை புதுப்பிக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.
ஆதார் அட்டையை புதுப்பித்தல் பணியை எளிதாக செய்துவிட முடிகிறது. ஆதார் அட்டையில் பெயரில் திருத்தம் செய்வதற்கு இருமுறை மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படுகிறது. முகவரியை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். ஆதாரில் பெயர், முகவரி மாற்றம் போன்றவற்றை எளிதில் செய்ய முடியாமல் பொதுமக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, “அஞ்சலகங்களில் ஆதார் புதுப்பித்தல், திருத்தங்கள் செய்தல், குழந்தைகளுக்கு ஆதார் அட்டை பதிவு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படுகிறது. தொலைபேசி எண் மாற்றம், முகவரி திருத்தம் போன்றவற்றுக்காக சென்றால் ஒரு நேரத்தில் ஏதேனும் ஒரு திருத்தம் மட்டுமே செய்ய முடியும் என்கிறார்கள். இதனால், ஆதார் சேவைகளை விரைவில் பெற முடிவதில்லை.
» அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் - புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு
» திமுக அரசால் மக்கள் உறக்கத்தை தொலைத்துள்ளனர் - கிருஷ்ணகிரி ஆய்வில் இபிஎஸ் குற்றச்சாட்டு
மேலும், ஒவ்வொரு அஞ்சலகத்திலும் காலையில் 7 மணிக்குள் சென்று டோக்கன் பெற வேண்டும். முதலில் வரும் 5 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படுகிறது. மற்றவர்கள் காத்திருந்து மீண்டும் அடுத்த நாள் செல்ல வேண்டியதுள்ளது. இதனால் ஒரு நாள் வேலையை விட்டுவிட்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
அஞ்சலகத்துக்கு உட்பட்ட பகுதியில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற்றால், அந்த அஞ்சலகத்தில் அன்றைய தினம் ஆதார் திருத்த சேவைகளை பெறமுடிவதில்லை. சிறப்பு முகாம் நடைபெறும் இடத்துக்கு சென்றால் கூட்டம் அலைமோதுகிறது. எனவே, தலைமை அஞ்சலகங்களைப் போல், அனைத்து அஞ்சலகங்களிலும் இரவு 8 மணி வரை ஆதார் மையங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறு செய்தால் பொதுமக்கள் தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது அஞ்சலகத்துக்கு சென்று ஆதார் திருத்த சேவைகளை பெற முடியும். அலைச்சல், காத்திருப்புக்கு அவசியம் இருக்காது. பொதுமக்களின் சிரமத்தை போக்க அஞ்சல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.