சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து முழுமையாக துண்டிப்பு!

By KU BUREAU

சென்னை: ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முழுமையாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரி இடையே ஃபெஞ்சல் புயல் சனிக்கிழமை கரையை கடந்தது. விழுப்புரன், திண்டிவனம், மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால், நீர்நிலைகள் நிரம்பி உபரிநீர் வெளியேறியதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மதுராந்தகம் வட்டத்தில் பல்வேறு ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறியதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் சாலைகளில் இருபுறங்களிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் அரசூரில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை மூழ்கடித்தபடி வெள்ளம் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அரசூர் பேருந்து நிறுத்தம் அருகே மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திருச்சி – சென்னை சாலையை மூழ்கடித்து சாலையில் இரண்டு அடிக்கும் மேலாக தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. விக்கிரவாண்டி அருகே மழைநீர் தேங்கியுள்ளதால் சித்தனியல் இருந்து சுமார் 1.5 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் ஆங்காங்கே வாகனங்கள் அனைத்தும் சாலையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. திருச்சி நோக்கி சென்ற வாகனங்கள் மேலும் முன்னேற முடியாமல் ஆங்காங்கே சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE