தாம்பரம்: சிட்லபாக்கம் காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, நள்ளிரவில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில் எந்த ஒரு வெடிகுண்டும் சிக்காததால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது
சிட்லபாக்கத்தில், சட்டம் மற்றும் ஒழுங்கு, குற்றப்பிரிவு, சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையம், குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆகிய காவல் நிலையங்கள் இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசிய நபர், ‘சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளேன், வெடிகுண்டை வெடிக்க வைப்பதற்கான ரிமோட்டை அழுத்தினால் காவல் நிலையம் வெடித்து சிதறும்’ என கூறி இணைப்பை துண்டித்துள்ளார். இதனை தொடர்ந்து சிட்லபாக்கம் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் தாம்பரம் மாநகர காவல் ஆணையரக அலுவலகத்தில் இருந்து ஐந்து பேர் கொண்ட வெடிகுண்டு நிபுணர்கள் சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் முடிவில் எந்த ஒரு வெடிகுண்டும் சிக்காததால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீஸார் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கள்ளக்குறிச்சி அருகே உள்ள வேப்பூர் பகுதியை சேர்ந்த ரஞ்சித் (43) என்பது தெரிய வந்துள்ளது. அவர் மனநலம் பாதிக்கப்பட்ட நபர், சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் சிட்லபாக்கம் பகுதியில் வசித்து வந்தபோது அவரது மனைவியுடன் தகராறு ஏற்படும்போதெல்லாம் காவல் கட்டுப்பாட்டறைக்கு தொடர்பு கொண்டு தனது மனைவியை கொலை செய்து விட்டார்கள் என கூறுவார்.
» கரூர்: ரேஷன் கடை விற்பனையாளர் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு தொடக்கம்
» மீட்புப் பணிகளில் திமுக அரசு படுதோல்வி அடைந்து விட்டது - அன்புமணி ஆதங்கம்
மனநல பாதிக்கப்பட்டவர் என்பதால் அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.மது போதையில் தொடர்ந்து ஏதாவது ஒரு புரளியை கூறுவதை அவர் வாடிக்கையாக வைத்திருந்தார்.சில மாதங்களுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டத்திலும் இது போன்ற செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். ‘அவரது செல்போன் எண் சிக்னலை வைத்து அவரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அவரை பிடித்து மனநல காப்பகத்தில் ஒப்படைக்க முடிவு செய்திருக்கிறோம்’ என போலீஸார் தெரிவித்தனர்.