ஹெச். ராஜாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

By KU BUREAU

திமுக எம்.பி. கனிமொழி குறித்து விமர்சனம் மற்றும் பெரியார் சிலை உடைப்பு கருத்து தொடர்பாக தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜாவுக்கு எதிராக தொடரப்பட்ட இரண்டு வழக்குகளில் தலா 6 மாதம் சிறை தண்டனை விதித்து சென்னையில் உள்ள எம்.பி. - எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2018ல், ‘பெரியார் சிலையை உடைப்பேன்’ என்று தனது எக்ஸ் தளத்தில் ஹெச்.ராஜா பதிவு செய்திருந்ததற்காகவும், திமுக எம்.பி. கனிமொழியை விமர்சித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் கருத்துக்களைப் பதிவிட்டிருந்ததாகவும், ஈரோடு நகர காவல்துறை, மற்றும் கருங்கல்பாளையம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் ஹெச்.ராஜா மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்குகளை, சென்னையில் உள்ள எம்.பி. - எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் விசாரித்து வந்தார். இந்த விசாரணையின்போது, பெரியார் சிலையை தான் உடைப்பேன் என்று பேசியதற்கு ஆதாரங்கள் இல்லை எனவும், திமுக எம்.பி. கனிமொழி குறித்த கருத்து அரசியல் ரீதியானது எனவும், ஹெச். ராஜா தரப்பில் வாதிடப்பட்டிருந்தது. இந்த விவகாரம் குறித்து திமுக எம்.பி. கனிமொழி புகார் அளிக்காத நிலையில், மூன்றாம் நபர் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்றும் வாதிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஜி.ஜெயவேல், காவல்துறை தரப்பில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு பதிவுகளும் ஹெச். ராஜாவின் சமூக வலைதள பக்கத்தில் இருந்து அனுப்பபட்டது என்பதை இந்த நீதிமன்றம் தீர்மானித்து, ஹெச். ராஜா குற்றவாளி என தீர்மானிக்கிறது. எனவே இந்த இரண்டு வழக்குகளிலும் ஹெச்.ராஜாவுக்கு தலா 6 மாதம் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.5,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில், ஹெச்.ராஜா தரப்பில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE