பிச்சாட்டூர் அணையிலிருந்து 500 கன அடி உபரிநீர் திறப்பு: ஆரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

By KU BUREAU

சென்னை/திருவள்ளூர்: பிச்சாட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வருவதால், ஆரணி ஆற்றுக்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம், நகரி அருகே உருவாகும் ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ளது பிச்சாட்டூர் அணை. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையிலிருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ள இந்த அணை 1.85 டி.எம்.சி. கொள்ளளவுக் கொண்டது. நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து பிச்சாட்டூர் அணைக்கு நேற்று மாலை நிலவரப்படி விநாடிக்கு 3,600 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர் இருப்பு 1.45 டிஎம்சியாக உள்ளது.

ஆகவே, அணையின் பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆந்திர நீர்வளத் துறை அதிகாரிகள், பிச்சாட்டூர் அணையிலிருந்து, நேற்று காலை 10 மணிமுதல் உபரிநீரை திறந்து வருகின்றனர். விநாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. பிச்சாட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கும்பட்சத்தில் வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவும் படிப்படியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அதுமட்டுமல்லாமல், திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்கள் நிரம்பி ஆரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளநீர், ஏ.என்.குப்பம் அணைக்கட்டு, லட்சுமிபுரம் அணைக்கட்டு, அ.ரெட்டிப்பாளையம் தடுப்பணை வழியாக விநாடிக்கு 3,200 கன அடி அளவுக்கு செல்கிறது ஆகவே, ஆரணி ஆற்றின் கரையோரத்தில் உள்ள தாராட்சி, பேரண்டூர், பெரியபாளையம், புதுவாயல், பெருவாயல், ஆலாடு, தத்தமஞ்சி, ஆண்டார்மடம் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அறிவுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE