சென்னை: புயல் காரணமாக கனமழை பெய்தபோதிலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 100 சதவீதம் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. மழையின்போது, பொதுமக்களுக்கு பால் கிடைக்க ஆவின் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. சென்னையில் 8 இடங்களில் நவீன பாலகங்கள் 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இதுதவிர, சென்னை மற்றும் புறநகரில் ஆவின் பால் விநியோகம் தங்கு தடையின்றி விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், சென்னை, சுற்றுவட்டார பகுதியில் 100 சதவீதம் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆவின் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 30-ம் தேதி சுமார் 15 லட்சம் லிட்டர் பால் , 25 ஆயிரம் பாக்கெட் யு.எச்.டி பால் மற்றும் 10 ஆயிரம் கிலோ பால் பவுடர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. கனமழை இருந்த போதிலும் பால் விநியோகத்தில் எவ்வித சிறு தடையும் ஏற்படவில்லை.
சென்னை மாநகராட்சி உடன் இணைந்து தேவைப்படும் முகாம்களுக்கு உடனடியாக ஆவின்பால், பால் பவுடர் மற்றும் யு.எச்.டி. பால் உடனுக்குடன் விநியோகம் செய்யப்படுகிறது.
» கொளத்தூரில் முதல்வர் ஆய்வு: மருத்துவமனையில் நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்
» இன்று 13 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை: 5 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை
சென்னை முழுவதும் உள்ள அனைத்து பாலகங்களிலும் பால் மற்றும் பால் பொருட்கள் போதுமான அளவு இருப்பு வைத்து விற்பனை நடைபெறுகிறது. பொதுமக்களுக்கு பால் எளிதில் கிடைக்க 8 ஆவின் பாலகங்கள் மூலமாக 24 மணி நேரமும் பால் விநியோகம் நடைபெறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.