விழுப்புரம், புதுச்சேரியை புரட்டிப் போட்ட கனமழை: மயிலத்தில் 51 செ.மீ. கொட்டியது

By KU BUREAU

புதுச்சேரி: ஃபெஞ்சல் புயலால் தமிழகத்​தின் விழுப்பு​ரம், கடலூர், கள்ளக்​குறிச்சி மாவட்​டங்​களும், புதுச்​சேரி​யும் கடுமையாக பாதிக்​கப்​பட்​டுள்ளன. விழுப்புரம் மாவட்டம் மயிலத்​தில் அதிகபட்​சமாக 51 செ.மீ. மழை கொட்​டிய​தால், பல பகுதிகள் வெள்​ளக்​காடாகின. பாதிக்​கப்​பட்ட பகுதி​களில் ராணுவத்​தினர், தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்​டுள்​ளனர்.

வங்கக்​கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் 30-ம் தேதி மாலை புதுச்​சேரி அருகே கரையை கடந்​தது. அப்போது, 90 கி.மீ. வேகத்​தில் பலத்த சூறைக்​காற்றுடன் அதிக​னமழை கொட்​டியது.

போக்குவரத்து நிறுத்தம்: தொடர்ந்து பெய்த கனமழை காரண​மாக, புதுச்​சேரி​யில் பல முக்கிய சாலைகள் நீரில் மூழ்​கின. புதுச்​சேரி நகரின் மைய பகுதியான வெங்கடா நகர், தென்றல் நகர், சாரம் உள்ளிட்ட பகுதிகள் மழைநீரால் சூழ்ந்து தனி தீவுகள்போல மாறி​யுள்ளன. கடலூர் - புதுச்​சேரி சாலை​யில் தண்ணீர் ஆறுபோல ஓடுவ​தால் போக்கு​வரத்து நிறுத்​தப்​பட்​டது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் அப்பகு​திக்கு சென்று பொது​மக்களை படகு மூலம் மீட்​டனர். மீட்பு பணிகளில் ராணுவத்​தினர் தீவிரமாக ஈடுபட்​டுள்​ளனர்.

சென்னை காரிசன் பட்டா​லியன் பிரிவை சேர்ந்த இந்திய ராணுவ படையினர் புதுச்​சேரி வந்து, மீட்பு பணியில் ஈடுபட்​டுள்​ளனர். புதுச்​சேரி நகரப் பகுதி​யில் உள்ள கிருஷ்ணா நகர், ஜீவா நகர் பகுதி​யில் 500-க்​கும் மேற்​பட்ட வீடு​களில் வெள்ளம் புகுந்​துள்ளது. இந்திய கடலோர காவல் படையினர், பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்​டுள்​ளனர்.

வம்புபட்டு ஏரி நிரம்பி உபரிநீர் வெளி​யேறு​வ​தால், புதுச்​சேரி - விழுப்புரம் சாலை துண்​டிக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் போக்கு​வரத்து நிறுத்​தப்​பட்டு, வாகனங்கள் பல கி.மீ. தூரம் சுற்றி செல்​கின்றன. புதுச்​சேரி​யில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்​தில் 48.4 செ.மீ. மழை கொட்டி தீர்த்​துள்ளது.

இதேபோல, விழுப்புரம் மாவட்​டத்​தின் பல்வேறு இடங்​களி​லும் கடந்த 2 நாட்​களாக கனமழை பெய்து வருகிறது. பாதிக்​கப்​படும் மக்களை தங்கவைக்க மாவட்டம் முழு​வதும் 850 தற்காலிக மையங்கள் அமைக்​கப்​பட்​டுள்ளன. பலத்த சூறைக்​காற்று, கனமழை காரணமாக சுமார் 30 மணி நேரமாக மின்​விநி​யோகம் தடைபட்​டுள்​ளது. ஓங்கூர் ஆற்றில் ஏற்பட்ட வெள்​ளப்​பெருக்​கால் கரையோர கிராமங்​களில் தண்ணீர் புகுந்​தது.விழுப்புரம் மாவட்டம் மயிலத்​தில் அதிகபட்​சமாக 51 செ.மீ. மழை பெய்​துள்ளது. வானூர், மரக்​காணம், திண்​டிவனத்​தில் 40 செ.மீ.க்கு மேல் மழை பெய்​துள்ளது.

கடலூர், கள்ளக்​குறிச்சி: கடலூர் மாவட்டம் முழு​வதும் நேற்று முன்​தினம் இரவு தொடங்கி விடிய விடிய கனமழை கொட்​டிய​தால் அண்ணா விளை​யாட்டு அரங்​கம், வில்​வநகர், பாதிரிக்​குப்​பம், பெரிய கங்கணங்​குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதி​களி​லும் வீடு​களில் மழை நீர் புகுந்​தது. தேசிய, மாநில பேரிடர் மீட்புபடையினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்​டுள்​ளனர். நீர்​பிடிப்பு பகுதி​யில் தொடர் மழை பெய்து வருவ​தால் வீராணம் ஏரி நிரம்​பியது. ஏரியின் பாது​காப்பு கருதி மதகுகள் வழியாக தண்ணீர் வெளி​யேற்​றப்​பட்டு வருகிறது.

கள்ளக்​குறிச்சி மாவட்​டத்​தி​லும் கள்ளக்​குறிச்சி, திருக்​கோ​விலூர், மடம்​பூண்டி, திருப்​பாலபந்​தல், கலயநல்​லூர், மணலூர்​பேட்டை உட்பட பல்வேறு பகுதி​களி​லும் கனமழை பெய்​தது. கனமழை, வெள்​ளத்​தால் பாதிக்​கப்​பட்ட அனைத்து பகுதி​களி​லும் மீட்பு நிவாரண பணி​கள் ​முழுவீச்​சில் நடந்து வரு​கின்றன. ​விழுப்பு​ரம், கடலூரில் வெள்​ளத்​தால் பா​திக்​கப்​பட்ட பகு​தி​கள் மற்றும் மீட்பு, நிவாரண நட​வடிக்கைகளை துணை ​முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், அமைச்​சர்​கள் பொன்​முடி, சிவசங்​கர், செந்​தில் பாலாஜி ஆகியோர் பார்​வை​யிட்​டு ஆய்​வு செய்​தனர். மயிலம், திண்டிவனத்தில் மழை பாதிப்புகளை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பார்வையிட்டு, நிவாரண உதவிகளை வழங்கினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE