முல்லை பெரியாறு அணையின் நீர்தேக்க பகுதியை மீட்க கோரி தமிழக எல்லையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

By என்.கணேஷ்ராஜ்

கூடலூர்: முல்லைப் பெரியாறு அணையின் நீர்த் தேங்கும் இடமான ஆனவச்சால் பகுதியை ஆக்கிரமித்து கேரள வனத் துறை சுற்றுலா வாகனங்களை நிறுத்துமிடமாக பயன்படுத்துகிறது. இந்த இடத்தை மீட்கக் கோரி தமிழக எல்லையான லோயர்கேம்ப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பென்னிகுவிக் பாலசிங்கம் தலைமை வகித்தார் வழிகாட்டுதல் குழு தலைவர் சலேத்து, தலைவர் பொன்காட்சி கண்ணன், துணைத் தலைவர் கூடலூர் ராஜீவ் காந்தி, பொருளாளர் ராதா கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக, பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சி தலைவர் முருகன்ஜி, தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் நிறுவனர் வழக்கறிஞர் சங்கிலி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் தேனி மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சக்கரவர்த்தி, நில வணிகர்கள் நல சங்க மாநிலத் துணைத் தலைவர் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் முல்லைப் பெரியாறு அணையின் நீர் தேக்கப் பகுதியான ஆனவச்சாலில் உள்ள கார் பார்க்கிங்கை அகற்ற வேண்டும். நீர்தேக்க பகுதிகளை மறுஅளவீடு செய்ய வேண்டும். பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழன்னை படகை இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முல்லைச் சாரல் விவசாய சங்க தலைவர் கொடியரசன், பாரதிய கிசான் சங்க தலைவர் சதீஷ் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE