“எல்லோருக்கும் எல்லாம் என்று செயல்படும் இயக்கம்தான் திமுக” - அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு

By பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்: எல்லோருக்கும் எல்லாம் என்று செயல்படும் இயக்கம் திமுக, என அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.

திண்டுக்கல்லில், அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் இ.பெ.செந்தில்குமார் தலைமை வகித்தார். அதிமுக, பாஜக, அமமுக, தேமுதிக கட்சிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு பேசியது: “ஏழை, பணக்காரர், சாதி, சமய வேறுபாடு இல்லாமல் ஏற்றத்தாழ்வு இல்லாமல், அனைவரும் ஒன்று என்ற கொள்கையை ஏற்றுக்கொள்ளும் இயக்கம் தான் திமுக. இளைஞர்கள் அத்தனை பேருக்கும் வழிகாட்டும் சக்தி திமுகவுக்கு உள்ளது. எல்லோருக்கும் எல்லாம் என்று செயல்படும் இயக்கம் திமுக.

மாற்றுக்கட்சியில் இருந்து இங்கு வந்து சேர்ந்துள்ள அனைவரையும் இந்த இயக்கம் உயர்த்தும். மக்களின் சக்திதான் எல்லாவற்றிற்கும் உயர்வான சக்தி. இந்த நாட்டை யார் ஆளவேண்டும் என்று நிர்ணயிக்கும் சக்திதான் மக்கள் சக்தி” என்றார். சில்வார்பட்டியை சேர்ந்த பாஜக நிர்வாகி பிரபாகரன் உள்ளிட்ட அதிமுக, அமமுக, தேமுதிக கட்சிகளை சேர்ந்தவர்கள் திமுகவில் அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னிலையில் இணைந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE