வேளாண் உற்பத்தி பொருளுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய வேண்டும்: இல.வேலுச்சாமி பேச்சு

By க.ராதாகிருஷ்ணன்

கரூர்: டிச.21-ம் தேதி திருவண்ணாமலை உழவர் பேரியக்க மாநாட்டில் விவசாய உற்பத்தி பொருளுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தப்படும் என தமிழ்நாடு உழவர் பேரியக்க இல.வேலுசாமி தெரிவித்தார்.

கரூர் மாவட்ட பாமக செயற்குழு கூட்டம் கரூர் ஜவஹர் கடைவீதியில் உள்ள தனியார் ஹோட்டல் அரங்கத்தில் இன்று (டிச.1) நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பிஎம்கே பாஸ்கரன் தலைமை வகித்தார். டிச.21-ம் தேதி திருவண்ணாமலையில் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் நடத்தும் மாநில மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

மாவட்ட தலைவர் சோ.தமிழ்மணி வரவேற்றார். தமிழ்நாடு உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் அழியாபுரம் தங்கவேல், மாவட்ட தலைவர் நடுப்பட்டி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு உழவர் பேரியக்க செயலாளர் இல.வேலுச்சாமி, துணை செயலாளர் பொன்.ரமேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பாமக கரூர் நகர செயலாளர் முருகேசன் நன்றி கூறினார்.

தமிழ்நாடு உழவர் பேரியக்க இல.வேலுச்சாமி பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: ''தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள். அவர்களின் நீண்ட கால நிறைவேறாத கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில மாநாடு திருவண்ணாமலையில் டிச.21ம் தேதி நடைபெறுகிறது. இதில் விவசாய நீண்டகால பிரச்சனைகள் விவாதிக்கப்பட உள்ளன.

விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும். விவசாய பணியின் போது அகால மரணமடையும் விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும். விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். பல்வேறு மாநிலங்களுடன் தொடர்புள்ள நீர்வள பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டும். பல்வேறு பணிகளுக்காக விளைநிலங்கள் ஆர்ஜிதம் செய்யப்படுவதை நிச்சயம் தடுக்கவேண்டும். கரும்பு டன்னுக்கு ரூ.5,000 வழங்கவேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ.4,000 வழங்கவேண்டும்.

கள் அனுமதி என்ற கோரிக்கையை எதிர்க்கிறோம். கள் மட்டுமல்ல மூளை சிதைக்கும் எவ்விதமான போதை பொருளுக்கும் தமிழகத்தில் இடமளிக்கக்கூடாது. கரூர் மாவட்டத்தில் இருந்து 10,000 பேரை பங்கேற்க செய்யவேண்டும். கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் ஆளுங்கட்சியினர் மணல் கொள்ளையில் ஈடுபடுவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். மண் வெட்டி எடுக்கப்படுவதாலும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

கரூர் மாவட்டத்தில் அதிகளவு கல் குவாரிகள் உள்ளன. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. எந்தளவு வெட்டவேண்டும். எத்தனை குவாரிகள் செயல்படவேண்டும் என விதிகள் உள்ளன. இவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். கரூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய திட்டங்கள் ஆளுங்கட்சியினர் மட்டுமே பயனடைகின்றனர்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE