புதுச்சேரி அருகே கரையை கடந்தது பெஞ்சல் புயல்: ஒரே நாளில் வெள்ளக்காடாக மாறிய தலைநகர் சென்னை

By KU BUREAU

சென்னை: வங்​கக்​கடலில் உருவான ‘ஃபெஞ்​சல்’ புயல் புதுச்​சேரி அருகே கரையை கடந்​தது. இதன் காரண​மாக, பலத்த வேகத்​தில் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்​டிய​தால், நேற்று ஒரே நாளில் சென்னை​யின் பல்வேறு பகுதி​களும் வெள்​ளக்​காடாக மாறின.

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு உள்ளிட்ட மாவட்​டங்​களில் நேற்று முன்​தினம் முதல் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. ஆவடியில் அதிகபட்சமாக 24 செ.மீ. மழை கொட்டியது. சென்னை, புறநகர் பகுதிகளில் 2 நாட்​களாக பெய்து வரும் கனமழை காரணமாக மாநகரில் 334 இடங்​களில் நீர் தேங்​கியது.

வேளச்​சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதி​களில் வீடு​களுக்​குள் வெள்​ளநீர் புகுந்​தது. சூறாவளி காற்​றால் 27 மரங்கள் வேரோடு சாய்ந்தன. 6 சுரங்கப் பாதைகள் மூடப்​பட்டன. 8 நிவாரண முகாம்​களில் 193 பேர் தங்க வைக்​கப்​பட்​டுள்​ளனர். பாதிக்​கப்​பட்ட பகுதி​களில் மாநக​ராட்சி சார்​பில் நேற்று மதியம் வரை 2.32 லட்சம் உணவு பொட்​டலங்கள் வழங்​கப்​பட்டன. சென்னை எழில​கத்​தில் உள்ள மாநில அவசரகால செயல்​பாட்டு மையத்தில் முதல்வர் ஸ்டா​லின் நேற்று ஆய்வு செய்​தார்.

இதற்​கிடையே, சென்னை மற்றும் புறநகர் பகுதி​களில் நேற்று முழு​வதும் விடாமல் மழை பெய்​த​தால் பல இடங்​களில் மழைநீர் தேங்​கியது. இதன் காரண​மாக, பேருந்து சேவைகள் குறைக்​கப்​பட்டன. வடபழனி, தியாகராய நகர், பிராட்வே, திரு​வான்​மியூர், தாம்​பரம், வியாசர்​பாடி, அடையாறு, ஆவடி, அம்பத்​தூர் உள்ளிட்ட பேருந்து நிலை​யங்கள் மற்றும் 20-க்​கும் மேற்​பட்ட பணிமனை​களில் மழைநீர் தேங்​கியது. விமான பயணி​களின் வசதிக்காக சென்ட்​ரல், பிராட்வே, கோயம்​பேடு, கிளாம்​பாக்​கத்​தில் இருந்து விமான நிலை​யத்​துக்கு சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​பட்டன.

கனமழை​யால் கொருக்​குப்​பேட்டை, வியாசர்​பாடி, பல்லா​வரம் பகுதி​களில் ரயில் தண்ட​வாளங்கள் நீரில் மூழ்​கின. அதனால் புறநகர் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்​தப்​பட்டன. ஏலகிரி எக்ஸ்​பிரஸ் ரத்து செய்​யப்​பட்​டது. பல்வேறு ரயில்கள் ஆவடி, திரு​வள்​ளூர், அரக்​கோணத்​தில் நிறுத்​தப்​பட்டன. சென்னை சென்ட்​ரல், எழும்​பூருக்கு ரயில்கள் வருகை, புறப்​பாடு தாமத​மானது. சென்ட்​ரலில் இருந்து புறப்பட வேண்டிய 9 ரயில்கள் சென்னை கடற்​கரை, திரு​வள்​ளூரில் இருந்து புறப்​பட்டன. புயலால் ரயில் சேவை பாதிக்​கப்​பட்​ட​தால் பயணிகள் கடும் அவதிக்​குள்​ளாகினர்.

கைகொடுத்த ‘மெட்ரோ’- பேருந்து, ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், மெட்ரோ ரயில்கள் பெரிய அளவில் பாதிப்பு இன்றி வழக்​கம்போல இயக்​கப்​பட்​டது மக்களுக்கு வசதியாக இருந்தது. சூறாவளி காற்று, கனமழை காரணமாக 55 விமான சேவைகள்ரத்து செய்யப்பட்டன. 20 விமானங்கள் ஹைதரா​பாத், பெங்​களூரு, திருச்சி விமான நிலை​யங்​களுக்கு திருப்​பி​விடப்​பட்டன. சென்னை விமான நிலையம் நேற்று பிற்​பகல் பகல் 12.30 மணி முதல் இன்று அதிகாலை 4 மணி வரை மூடப்​படு​வதாக அறிவிக்​கப்​பட்​டது.

பல இடங்​களில் மரங்கள் சாய்ந்தன. பாது​காப்பு கருதி பல பகுதி​களில் மின்​சாரம் துண்​டிக்​கப்​பட்​டது. சென்னை, காஞ்​சிபுரம், திரு​வள்​ளூர், செங்​கல்​பட்டு மாவட்​டங்​களில் அபராத தொகை இல்லாமல் டிசம்பர் 10-ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்​த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்​கிடையே, ‘ஃபெஞ்​சல்’ புயல் நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்​தின் தென் மண்டல தலைவர் பாலசந்​திரன் கூறிய​தாவது: தென்​மேற்கு வங்கக்​கடல் பகுதி​களில் நிலவிய ‘ஃபெஞ்​சல்’ புயல், வட தமிழக கரையை நெருங்கி, புதுச்​சேரி அருகே நேற்று மாலை புயலாக கரையை கடந்​தது. இதன் காரணமாக நேற்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சென்னை மீனம்​பாக்​கத்​தில் 11 செ.மீ. நுங்​கம்​பாக்​கம், புதுச்​சேரி​யில் 10 செ.மீ. திருத்​தணி​யில் 9 செ.மீ. மழை பதிவாகி​யுள்​ளது.

இன்று விழுப்பு​ரம், கள்ளக்​குறிச்சி, கடலூர் மாவட்​டங்​கள், புதுச்​சேரி​யில் ஒருசில இடங்​களில் கன முதல் மிக கனமழை​யும், ஓரிரு இடங்​களில் அதிக​னமழை​யும் பெய்​யக்​கூடும். சென்னை, திரு​வள்​ளூர், செங்​கல்​பட்டு, காஞ்​சிபுரம், ராணிப்​பேட்டை, திரு​வண்ணா​மலை, தருமபுரி, சேலம், பெரம்​பலூர், அரியலூர், தஞ்சாவூர், திரு​வாரூர், மயிலாடு​துறை,நாகப்​பட்​டினம் மாவட்​டங்​கள், காரைக்​கால் பகுதி​களில் ஓரிரு இடங்​களில் மிக கனமழை​யும்,வேலூர், திருப்​பத்​தூர், கிருஷ்ணகிரி, நீல​கிரி, ஈரோடு, நாமக்​கல்,​திருச்சி, புதுக்​கோட்டை ​மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் க​னமழை​யும் பெய்ய வாய்ப்பு உள்​ளது. 70 கி.மீ. வேகத்​தில் பலத்த ​காற்றும் வீசும். இவ்​வாறு அவர்​ கூறினார்​.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE