ஃபெஞ்சல் புயல் எப்போது முழுமையாக கரையை கடக்கும்? - வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு

By KU BUREAU

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே நேற்று மாலை 5.30 மணியளவில் கரையைக் கடக்கத் தொடங்கியது. மாலை நிலவரப்படி 4 மணிநேரத்தில் புயல் கரையை கடந்துவிடும் என கூறப்பட்ட நிலையில், தற்போது ஃபெஞ்சல் புயலானது இன்னும் 1 மணிநேரத்தில் முழுவதுமாக கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 1ம் தேதி காலை 12.09 மணிக்கு வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘சமீபத்திய அவதானிப்புகளின்படி, புயலின் மையம் கரையைக் கடக்கிறது. இது மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் கடந்து வருகிறது. மேலும் அடுத்த 1 மணி நேரத்திற்கு மணிக்கு 70 முதல் 90 கிமீ வேகத்தில் வீசக்கூடும். அதன் பிறகு, அது தொடர்ந்து மேற்கு-தென்மேற்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 6 மணி நேரத்தில் படிப்படியாக வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறக்கூடும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே மாலை 5.30 மணியளவில் கரையைக் கடக்கத் தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாலை நிலவரப்படி 4 மணிநேரத்தில் புயல் கரையை கடந்துவிடும் என கூறப்பட்ட நிலையில், தற்போது ஃபெஞ்சல் புயலானது இன்னும் 1 மணிநேரத்தில் முழுவதுமாக கரையை கடக்கும் எனவும், 10 கிமீ வேகத்தில் கரையை கடந்துவருவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஃபெஞ்சல் நேற்று மாலை 5.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கியது. இந்த சூழலில் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. புயல் கரையை கடக்கும் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு சுமார் 70+ கிலோ மீட்டருக்கு மேல் பல இடங்களில் வீசி வருகிறது.

குறிப்பாக புயல் கரையை கடக்கும் பகுதியான செய்யூர், மரக்காணம், புதுச்சேரியில் பலத்த மழை பொழிந்து வருகிறது. இந்த சூழலில் இந்திய வானிலை ஆய்வு மையம் இரவு 10.30 மணி அளவில் வெளியிட்ட அறிக்கையில் ஃபெஞ்சல் புயல் புதுச்சேரிக்கு 30 கிலோ மீட்டர் வடகிழக்கிலும், மகாபலிபுரத்துக்கு தெற்கே 50 கிலோ மீட்டர் தென்மேற்கிலும், சென்னைக்கு 90 கிலோ மீட்டர் தென்மேற்கிலும் நிலை கொண்டுள்ளது. புயல் தொடர்ந்து தென்மேற்கு பக்கமாக நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மேலும், அடுத்த 2 மணி நேரத்தில் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழையை பொறுத்தவரையில் இரவு 1 மணி வரை விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பொழியும் என இரவு 10 மணிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதியிலும் மிதமான மழை பொழிய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE