சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

By KU BUREAU

சென்னை: சென்னையில் புயல் மற்றும் கனமழையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சக்திவேலின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னை மாவட்டம், வேளச்சேரி விஜயநகர் முதல் பிரதான சாலை, இரண்டாவது குறுக்குத் தெருவில் சக்திவேல், த.பெ.விநாயகம், வயது 47 என்பவர் இன்று (30.11.2024) மாலை சுமார் 05.30 மணியளவில் பெஞ்சல் புயல் காரணமாக பலத்த காற்று மற்றும் கனமழையால் எதிர்பாராதவிதமாக அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்து உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

சக்திவேலின் மறைவு அவரது குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு மின்சார வாரியம் சார்பாக ஐந்து லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்." இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலவி வந்த ஃபெஞ்சல் புயல் தற்போது கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. புயலின் முன் பகுதி கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. அடுத்த 3 அல்லது 4 மணி நேரங்களில் புயல் முழுமையாக கரையை கடந்துவிடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், சென்னை வேளச்சேரி, விஜயநகர் இரண்டாவது மெயின்ரோடு சந்திப்பில் பலத்த காற்று காரணமாக மின்கம்பி அறுந்து கீழே விழுந்தது. அப்போது அந்த வழியாக வந்த சக்திவேல் என்பவர் மீது மின்கம்பி பட்டதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்தார்.

அதேபோல பிராட்வே பகுதியில் வங்கி ஏடிஎம்-ல் பணம் எடுக்கச் சென்ற வட மாநில வாலிபர் சந்தன் என்பவர் மின்சாரம் மின்சாரம் தாக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வியாசர்பாடி கணேசபுரம் பகுதியில் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த இசைவாணன் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். சென்னையில் மின்சாரம் தாக்கி ஒரே நாளில் மூன்று பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE