மதுரை: உலக மரபு வாரத்தை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் இன்று (நவ.30) தூத்துக்குடி மாவட்ட அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் தொல்லியல் பயிற்சி அளிக்கப்பட்டது.
உலக மரபு வாரத்தை முன்னிட்டு பள்ளிக்கல்வித் துறை, தூத்துக்குடி மாவட்ட தொல்லியல்துறை, சிவகளை தொல்லியல் கழகம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட பள்ளி ஆசிரியர்களுக்கு ‘பொருநை முதல் வைகை’ எனும் ஒருநாள் தொல்லியல் களப்பயணமாக இன்று காலையில் தூத்துக்குடியிலிருந்து மதுரைக்கு புறப்பட்டனர்.
அதனை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இன்று காலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பயணத்தில் 150 ஆசிரியர்கள் மற்றும் முக்கானி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 50 பேர் பங்கேற்றனர். தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி வாழ்த்தி அனுப்பினார்.
» டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழக அரசு ஒப்புதலா? - அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
» புயல் முன்னெச்சரிக்கை: கடலூரில் உயர்மின் கோபுர விளக்குகள் இறக்கம்
இவர்கள் தூத்துக்குடியில் இருந்து தொல்லியல் களப் பயணத்திற்கு மதுரைக்கு புறப்பட்டனர். மதுரையில் திருமலை நாயக்கர் அரண்மனை, மீனாட்சி அம்மன் கோயில், கலைஞர் நூலகம் மற்றும் கீழடி அகழாய்வு தளம், அருங்காட்சியகம் செல்ல திட்டமிட்டனர். முதலில் திருமலை நாயக்கர் அரண்மனைக்கு சென்றனர்.
இங்கு திருமலை நாயக்கர் அரண்மனை பொறுப்பாளர் ஆசைத்தம்பி, மதுரை மாவட்ட தொல்லியல் அலுவலர் ஆனந்தி, அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் மீ.மருதுபாண்டியன் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி அளித்தனர். திருமலை நாயக்கர் அரண்மனை வரலாறு குறித்தும் விளக்கி கூறினர்.
பின்னர், கலைஞர் நூலகம், கீழடி அகழாய்வு தளம், அங்குள்ள அருங்காட்சியகம் சென்று பார்வையிட்டனர். இதனை, சிவகளை தொல்லியல் கழக செயலர் ஆசிரியர் மாணிக்கம், ஆசிரியர்கள் பழனிசாமி, பார்ஜின், சரவணகுமார், ஞானசேகரன், பொன்செல்வி, ஜெயபிரியா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.