ஃபெஞ்சல் புயல் எதிரொலி - சென்னை விமான நிலையம் மூடல்; மின்சார ரயில் சேவை குறைப்பு!

By KU BUREAU

சென்னை: ஃபெஞ்சல் புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை விமான நிலையம் இன்று மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல புறநகர் மின்சார ரயில் சேவை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

‘ஃபெஞ்​சல்’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமான ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியிருப்பதால் நண்பகல் 12 மணிவரை இரவு 7 மணி வரை விமானநிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல புறநகர் மின்சார ரயில் சேவை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நிலைமை சீரான பின்னர் மீண்டும் ரயில்கள் வழக்கம் போல இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கனமழை காரணமாக, சென்னை கோட்டத்தில் உள்ள அனைத்து புறநகர் பிரிவுகளிலும் மின்சார ரயில் சேவைகள் மறு அறிவிப்பு வரும் வரை குறைவான அளவில் இயக்கப்படும். புயலின் போது பயணிகளின் பாதுகாப்பை கருதில் கொண்டு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே தெரிவித்துள்ளது.

மெட்ரோ ரயில் சேவைகள் எவ்வித தடை, தாமதமும் இன்றி வழக்கம் போல் இயங்குவதாக சென்னை மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக மெட்ரோ ரயில் நிலையப் படிகள், லிஃப்ட்களைப் பயன்படுத்தும்போது பயணிகள் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கோயம்பேடு, செயின்ட் தாமஸ் மவுன்ட், அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங் பகுதிகளில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என பயணிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் மெட்ரோ பயணிகளின் உதவிக்கு 1860 425 1515 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம், பெண்களுக்கான ஹெல்ப்லைன் 155370 என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாருர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடற்கரை பகுதிக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புயல் காரணமாக சென்னையில் உள்ள அனைத்து பூங்காக்கள், திரையரங்குகள் இன்று மூடப்பட்டுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE