கோடநாடு வழக்கில் பழனிசாமியிடம் விசாரணை: அரசு தரப்பு வழக்கறிஞர் தகவல்

By KU BUREAU

உதகை: கோடநாடு கொலை கொள்ளை வழக்​கில் தேவைப்​பட்​டால் பழனிசாமி​யிட​மும் விசாரணை நடத்​தப்​படும் என்று அரசு தரப்பு வழக்​கறிஞர் ஷாஜகான் தெரி​வித்​தார்.

கடந்த சில தினங்​களுக்கு முன்பு சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்​கின் மேல்​முறை​யீட்டு மனு விசா​ரணைக்கு வந்த​போது, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி​யிடம் ஏன் விசா​ரிக்கக் கூடாது என்று உயர் நீதி​மன்ற நீதிபதி கேள்வி எழுப்பி இருந்​தார்.

இந்நிலை​யில், உதகை​யில் உள்ள மாவட்ட அமர்வு நீதி​மன்​றத்​தில் இந்த வழக்கு நேற்று விசா​ரணைக்கு வந்தது. சிபிசிஐடி போலீ​ஸார் தரப்​பில் அரசு சிறப்பு வழக்​கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் ஆஜராகி, புலன் விசாரணை நடைபெற்று வருவ​தால் காலஅவ​காசம் கேட்​டனர்.

குற்றம் சாட்​டப்​பட்​டோர் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் விஜயன், “கொலை, கொள்ளை நடைபெற்ற கோடநாடு பங்களாவை ஆய்வு செய்ய அனும​திக்​கு​மாறு ஏற்கெனவே மனு தாக்கல் செய்​யப்​பட்டு உள்ளது. ஆனால், இதுவரை அனுமதி வழங்​கப்​பட​வில்லை” என்றனர்.

இதற்கு, “குற்றம் சாட்​டப்​பட்​டோர் தரப்​பினர், சம்பவம் நடைபெற்ற கோடநாடு பகுதி​யில் ஆய்வு செய்ய அனும​திக்க முடி​யாது” என்று அரசு தரப்பு வழக்​கறிஞர்கள் எதிர்ப்புத் தெரி​வித்​தனர். இரு தரப்பு வாதத்​தை​யும் கேட்ட நீதிபதி முரளிதரன், விசா​ரணையை டிச. 20-ம் தேதிக்கு தள்ளி​வைத்து உத்தர​விட்​டார். பின்னர், அரசு வழக்​கறிஞர் ஷாஜகான் செய்தி​யாளர்​களிடம் கூறும்​போது, “அதிமுக நிர்​வாகி சஜீவனிடம் விசாரணை நடத்​தப்​பட்​டது. புலன் விசா​ரணை​யின்​போது, ஒவ்வொரு​வரை​யும் விசா​ரிக்க வேண்​டியது அதிகாரி​யின் கடமை. பழனிசாமி​யிடம் விசா​ரிக்க வேண்​டும் என்று குற்றம் சாட்​டப்​பட்​ட​வர்கள் தரப்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்கல் செய்​யப்​பட்​டது.

அந்த வழக்கு விசா​ரணை​யின்​போது, பழனிசாமியை எதிரிதரப்பு சாட்​சியாக விசா​ரிக்க வேண்​டும் என்று குற்றம் சாட்​டப்​பட்​ட​வர்கள் கேட்டுக் கொண்​டுள்​ளனர். ஆனால், தற்போது வழக்குவிசாரணை நடந்து கொண்​டிருப்​ப​தால், யாரை விசா​ரிக்க வேண்​டும் என்பதை விசாரணை அதிகாரி​கள்​தான் முடிவு செய்​வார்​கள். தேவைப்​பட்​டால் பழனிசாமி​யிட​மும் விசாரணை நடத்தப்படும்.

வழக்​கில் தொடர்​புடைய​வர்​கள், தகவல்கள் மற்றும் ஆதாரங்களை முன்​வைத்து விசாரணை நடத்​தப்​பட்டு வருகிறது. அரசு தரப்பு சாட்​சியாக இருந்​தா​லும் அல்லது எதிரி தரப்பு சாட்​சியாக இருந்​தா​லும் நிச்​ச​யம் ​விசா​ரிக்​கப்​படு​வார்​கள். ​விசா​ரணை​யின்​போது கிடைக்​கும் தகவலின் அடிப்​படை​யில், ​யாரை வேண்​டு​மானாலும் ​விசாரிக்கலாம்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE