குருவராஜகண்டிகை ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்: திருவள்ளூர் ஆட்சியர் அதிரடி

By இரா.நாகராஜன்

திருவள்ளூர்: ஊராட்சி மன்ற தலைவருக்கான கடமையில் இருந்து தவறியதாக குருவராஜகண்டிகை ஊராட்சி மன்ற தலைவரை பதவி நீக்கம் செய்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட குருவராஜகண்டிகை ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வந்தவர் சி.ரவி. இவர், பல்வேறு நிகழ்வுகளில் ஊராட்சி மன்ற தலைவருக்கு விதிக்கப்பட்ட சட்டப்படியான கடமையில் இருந்து தவறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், சி.ரவி, ஊராட்சிக்கு நிதியிழப்பு ஏற்படுத்தியதோடு, அரசு விதிமுறைகளையும் சட்ட விதிமுறைகளையும் மீறி தன்னிச்சையாக செயல்பட்டுள்ளார் என்பது ஊரக வளர்ச்சித் துறையினரின் விசாரணையில் நிரூபணமாகியுள்ளது. இதனால், சி.ரவி தொடர்ந்து குருவராஜ கண்டிகை ஊராட்சி மன்ற தலைவராக செயல்பட்டால் ஊராட்சிக்கு பெருமளவு நிதியிழப்பை ஏற்படுத்துவதோடு தனது அதிகாரத்தை மேலும் துஷ்பிரயோகம் செய்வார்.

இதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205 (11)-ல் ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி குருவராஜ கண்டிகை ஊராட்சி மன்ற தலைவர் சி.ரவியை ஊராட்சி மன்ற தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து, மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார்" என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE