மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி - திரும்பப் பெற எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

By KU BUREAU

சென்னை: மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அளித்த அனுமதியைத் திரும்பப் பெறுமாறு மத்திய அரசையும், உரிய நடவடிக்கை எடுக்குமாறு திமுக அரசையும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாப்பட்டி-நாயக்கர்பட்டியில் வேதாந்தா குழுமத்தின் Hindustan Zinc நிறுவனம் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் இன்று கடையடைப்பு போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் மீதோ, அவர்கள் சார்பில் கொடுக்கப்படும் வாக்குறுதிகளின் மீதோ மக்களுக்கு துளியும் நம்பிக்கை என்பது கிடையாது.

மேலூர் பொதுமக்களின் தொடர் போராட்டங்களுக்கு அதிமுக என்றும் துணைநிற்கும். அஇஅதிமுக சார்பில் மாவட்டக் கழகச் செயலாளரும் , சட்டமன்ற உறுப்பினரும் தொடர்ந்து அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொள்வார்கள்.

பொதுமக்களின் உணர்வுகளையும், தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் தளமான அரிட்டாபட்டி பாதிக்கப்படுவதையும் கருத்திற்கொண்டு, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அளித்த அனுமதியைத் திரும்பப் பெறுமாறு மத்திய அரசையும், உரிய நடவடிக்கை எடுக்குமாறு திமுக அரசையும் வலியுறுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE