இறையாண்மைக்கு எதிராக பேசியதாக புகார்: சீமான் மீதான வழக்கை விரைந்து விசாரிக்க உத்தரவு

By KU BUREAU

சென்னை: இந்திய இறையாண்​மைக்கு எதிராக பேசி​ய​தாக, நாம் தமிழர் கட்சி ஒருங்​கிணைப்​பாளர் சீமானுக்கு எதிராகப் பதியப்​பட்ட வழக்கை விரைந்து விசா​ரிக்​கும்படி கீழமை நீதி​மன்​றத்​துக்கு உயர் நீதி​மன்றம் உத்தர​விட்​டுள்​ளது.

தமிழக மீனவர்​களைத் தாக்கிய இலங்கை ராணுவத்​தைக் கண்டித்து கடந்த 2010-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சி சார்​பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்​பாட்டம் நடந்​தது. அதில் பேசிய அக்கட்​சி​யின் ஒருங்​கிணைப்​பாளர் சீமான், இந்திய இறையாண்​மைக்கு எதிராக, இரு சமூகத்​தினருக்கு இடையே மோதலை உருவாக்​கும் வகையில் பேசி​யதாக அவர் மீது போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​தனர். அந்த வழக்​கில் கைதான அவர், பின்னர் ஜாமீனில் விடுவிக்​கப்​பட்​டார்.

சென்னை ஜார்ஜ் டவுன் நீதி​மன்​றத்​தில் நிலுவை​யில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் கடந்த 2021-ம் ஆண்டு சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்கல் செய்திருந்​தார். இந்த மனு மீதான விசாரணை நீதிப​திகள் எஸ்.எம்​.சுப்​ரமணி​யம், எம்.ஜோ​திராமன் ஆகியோர் அடங்கிய அமர்​வில் நடைபெற்றது. அப்போது காவல்​துறை தரப்​பில் ஆஜரான அரசு குற்​ற​வியல் வழக்​கறிஞர் ராஜ்கு​மார், இந்த வழக்​கில் 13 சாட்​சிகள் விசா​ரிக்​கப்​பட்​டுள்ள​தால் வழக்கை ரத்து செய்​யக்​கூடாது என வாதிட்​டார்.

அப்போது நாம் தமிழர் கட்சி சார்​பில் ஆஜரான வழக்​கறிஞர் எஸ்.சங்​கர், சாட்​சிகள் விசாரணை தொடங்கி விட்​ட​தால் இந்த மனுவை திரும்பப் பெறு​வதாக தெரி​வித்​தார். அதைப்​ப​திவு செய்து கொண்ட நீதிப​தி​கள், வழக்கை திரும்​பப்பெற அனும​தி​யளித்​தனர். அதே​நேரம் இந்த வழக்கை ​விரைந்து ​விசா​ரித்து ​முடிக்க வேண்​டும் என கீழமை நீ​தி​மன்​றத்​துக்கு உத்​தர​விட்டுள்​ளனர்​.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE