குன்னூர்: இந்தியா 100 நாடுகளுக்கு பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்கிறது என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறினார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரியில் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக உதகையிலிருந்து நேற்று காலை கார் மூலம் வெலிங்டன் சென்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, அங்குள்ள போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும், உயிர்நீத்த ராணுவ வீரர்களின் குடும்பத்தாருக்கு நலத் திட்டங்களை வழங்கினார்.
முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி கூட்ட அரங்கில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் வீரேந்திர வாட்ஸ் வரவேற்றார். தமிழக அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் முன்னிலை வகித்தார். கல்லூரியில் பயிற்சி பெற்று வரும் அதிகாரிகள், தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பயிற்சி அதிகாரிகள் மத்தியில் பேசியதாவது: நாட்டிலேயே முதன்மையான இந்த பயிற்சிக் கல்லூரியில் 26 நாடுகளைச் சேர்ந்த, 38 அதிகாரிகள் பயிற்சி பெறுகின்றனர். பெண் அதிகாரிகளும் பயிற்சி பெறுவது இன்றியமையாதது. வரும் காலங்களில் அதிக அளவில் பெண்கள் இதுபோன்ற பாதுகாப்பு படை பயிற்சிகளில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கிறேன்.
பெண்கள் நாட்டுக்காக சேவைபுரிவது பாராட்டுக்குரியது. அனைத்து துறைகளிலும் மகளிர் சாதனை படைத்து வருகின்றனர். உலகின் உயர்ந்த போர்க்களமான சியாச்சினில் பணிபுரிந்து வரும் பெண் அதிகாரிகளை சந்தித்துள்ளேன். முப்படைகளில் முக்கியப் பொறுப்புகளில் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக, இந்திய கடற்படையில் முதன்முறையாக ஒரு பெண் அதிகாரி கமாண்டிங் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இம்மாத தொடக்கத்தில் கோவாவில் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் பணிபுரியும் பெண் அக்னி வீரர்கள் மற்றும் மாலுமிகளை சந்தித்தேன். வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி, இந்திய மற்றும் நட்பு நாடுகளின் பாதுகாப்புத் துறையில் திறமையான அதிகாரிகளை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்து வருகிறது. 70 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்தக் கல்லூரியில், நவீனத் தொழில்நுட்பம், டிஜிட்டல் மயத்துடன் சிறப்பான உட்கட்டமைப்புடன் பயிற்சி அளிக்கப்பட்டுவருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
சர்வதேச அளவில் இந்த பயிற்சி மையம் முன்னோடியாகத் திகழ்கிறது. இங்கு பயிற்சி பெற்ற பல அதிகாரிகள், தங்கள் நாடுகளில் முக்கியப் பதவிகளில் பணியாற்றி வருகின்றனர். இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த வளர்ச்சியை உலக நாடுகள் அங்கீகரிக்கின்றன. இந்தியா, எதிர்கால சவால்களை சமாளிக்கும் வகையில், தனித்துவத்துடனும், சுயசார்புடனும் முன்னேறி வருகிறது. நமது பாதுகாப்புத்துறை தளவாட உற்பத்தியில் தன்னிறைவு பெற்று, நம்பகத்தன்மையுடன் ஏற்றுமதி செய்து வருகிறது. பாதுகாப்புத் துறையில் ஹெச்ஏஎல், டிஆர்டிஓ நிறுவனங்கள் தடம் பதித்து வருகின்றன. தற்போது 100-க்கும் அதிகமான நாடுகளுக்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ராணுவ தளவாட ஏற்றுமதி 30 மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு ‘மேக் இன் இந்தியா’ திட்டமே முக்கியக் காரணம்.
நாம் எப்போதும் புதிய சவால்களை சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும். உள்நாட்டு பாதுகாப்பு மட்டுமின்றி, சைபர் குற்றங்கள் மற்றும் தீவிரவாதத்தையும் சமாளிக்க வேண்டியுள்ளது. மேலும், காலநிலை மாற்றத்துக்கும் தயாராக இருக்க வேண்டும். எனவே, ஆழ்ந்த ஆராய்ச்சியுடன் நவீனத் தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும். இந்தியா, உலகத்தை ஒரு குடும்பமாக பாவித்து வருவதால், சர்வதேச அளவில் அமைதி மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.