‘எங்கள் கோரிக்கையை நிறைவேற்றிய விஜய்க்கு நன்றி’ - திருச்சி மாவட்ட மக்கள் நீதி மய்யம் நெகிழ்ச்சி

By KU BUREAU

திருச்சி: தவெக மாநாட்டிற்கு சென்ற பொழுது உயிர்நீத்த ஆறு தொண்டர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்ச ரூபாய் நிதி வழங்கிய விஜய்க்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கிஷோர்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசியலில் அரசியலியக்கத்தினர் இரண்டு வகை. மக்கள் பிரச்சினைகளை பல ரூபத்தில் சம்மந்தப்பட்டவர்கள் பார்வைக்கு கொண்டு சென்றாலும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல இருப்பது முதல் வகை. அதே வேளையில் நியாயமான கோரிக்கைகளை உடனே செவிசாய்ப்பது இரண்டாவது வகை.

இப்படியான அரசியலில், தான் இரண்டாவது வகை என மீண்டும் ஒருமுறை நிருபித்துள்ளார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்கள். ஏற்கனவே தனது அரசியல் இயக்கத்தின் பெயரில் எழுத்து பிழையிருப்பதை சுட்டிகாட்டியவுடன் சரிசெய்தார் விஜய். தமிழக வெற்றிக் கழக மாநில மாநாட்டிற்கு செல்லும் வழியில் உயிர் நீத்த திருச்சியை சார்ந்த நிர்வாகிகள் இரண்டு பேர் உள்ளிட்டவர்களுக்கு, நிதி வழங்க மக்கள் நீதி மய்யம் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் கோரிக்கை விடுத்திருந்தோம்.

மேலும் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு இடம் கொடுத்தவர்களுக்காக விஜய் விருந்து கொடுத்து உபசரித்த பொழுது, மாநாட்டிற்காக இடம் கொடுத்தவர்களுக்கு விருந்து. ஆனால் விஜய்க்காக ரசிகர் மன்ற காலம் தொட்டு உழைத்தவர்களுக்கு இதயத்தில் மட்டும் இடமா என சற்று காட்டமாகவே அறிக்கை வாயிலாக விஜய்க்கு கோரிக்கை விடுத்திருந்தோம்.

இதனை தொடந்து த.வெ.க மாநாட்டிற்கு சென்ற பொழுது உயிர்நீத்த ஆறு தொண்டர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்ச ரூபாய் நிதியும்,மறைந்த நபர்களின் குடும்பத்தின் பொருளாதார சூழலுக்கு ஏற்ப அவர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவுவதாக விஜய் அறிவித்துள்ளது உள்ளபடியே வரவேற்க்கதக்கது.

எனவே பாரம்பட்சம், அரசியல் காரணமின்றி சக தோழர்களை இழந்ததாக உணர்ந்து மக்கள் நீதி மய்ய திருச்சிதெற்கு மாவட்டத்தின் சார்பில் மேற்படி கோரிக்கையை விடுத்திருந்தோம். அதனை ஏற்று நிதியுதவி வழங்கிய புதிய அரசியல் பாதையை தேர்ந்தெடுத்து பயணிக்கும் தமிழக வெற்றிக் கழக தலைவருக்கு நெஞ்சார்ந்த நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துகொள்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE