ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் தொடர் மழை: சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன் பகுதிகளில் தொடர்ந்து பெய்த மழையினால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்துள்ளது.

வங்கக்கடலில் ஏற்பட்ட வளிமண்டல கீழடுக்கு சுழற்சி அதனை தொடர்ந்து வங்க கடலில் நிலை கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினால் கடந்த ஒரு வார காலமாக ராமேசுவரம், தனுஷ்கோடி தங்கச்சிமடம் பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் தொடர் மழை பொழிந்தது. குறிப்பாக மேகவெடிப்பினால் ஒரே நாளில் மட்டும் ராமேசுவரத்தில் அதிகப்பட்சமாக 438 மி.மீ, தங்கச்சிமடம் 338 மி.மீ, பாம்பன் 280 மி.மீ, மண்டபம் 271 மி.மீ மழையும் பதிவானது.

இந்நிலையில் ராமேசுவரத்திற்கு கடந்த வாரம் வரையிலும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்த நிலையில், தொடர் மழையினால் ராமேசுவரம் கோயிலுக்கு பக்தர்களும், தனுஷ்கோடிக்கு சுற்றுலாப் பயணிகள் குறைந்த எண்ணிக்கையிலேயே வந்துள்ளனர். இதனால் சுற்றுலாவை நம்பியுள்ள ஆட்டோ ஓட்டுநர்கள், சிறுவியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர். பகலில் வெப்ப நிலை அதிகபட்சம் 28 டிகிரி செல்சியஸ், இரவில் குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியஸ் உணரப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE