கோரிப்பாளையம் மேம்பால கட்டுமான பணியில் இரும்பு மோல்டுகள் சரிந்து விபத்து: 6 ஊழியர்கள் படுகாயம்

By என்.சன்னாசி

மதுரை: கோரிப்பாளையத்தில் மேம்பால கட்டுமான பணியின்போது, இரும்பு மோல்டுகள் சரிந்து விழுந்ததில் 6 ஊழியர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோரிப்பாளையம், மேலமடை பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, மேம்பாலங்கள் கட்டுமானப் பணி சில மாத்திற்கு முன்பு தொடங்கி நடக்கிறது. கோரிபாளையம் மையப் பகுதியில் இருந்து செல்லூர் பாலம் ஸ்டேசன் ரோடுக்கு செல்லும் விதமாக பாலம் கட்டுமானப் பணி நடக்கிறது. அப்பகுதியில் தூண்கள் அமைத்த நிலையில், மேல் பகுதியில் கான்கீரிட் போடும் பணி இரவு, பகலாக நடக்கிறது.

இந்நிலையில், பாலம் ஸ்டேசன் ரோட்டில் நேற்று முன்தினம் இரவிலும் வழக்கம் போல் பணி நடந்தது. 9-10 வது தூண்களுக்கு இடையில் பாலத்தை இணைக்கும் வகையில் பாலத்தின் மேல் பகுதியில் கான்கிரீட் போடும் பணியில் திருச்சியைச் சேர்ந்த பழனிச்சாமி , சிவகங்கை மாவட்டம் வெள்ளிக்குறிச்சி அய்யங்காளை, மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள சுண்ணாம்பு காளவாசல் பகுதி பூவலிங்கம், இளையான்குடி பிரபு உள்ளிட்டோர் ஈடுபட்டிருந்தார்.

சுமார் 11 மணியளவில் திடீரென கான்கிரீடிற்கான இரும்பு மோல்டுகள், சாரம் சரிந்ததால் பழனிச்சாமி உள்ளிட்ட ஊழியர்கள் கீழே விழுந்து மோல்டுகளுக்குள் சிக்கினர். இச்சம்பவம் குறித்து செல்லூர் போலீஸார், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்தில் சிக்கிய காயமடைந்தவர்களை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதில் பழனிச்சாமி (55), அய்யங்காளை (48), பூவலிங்கம் (40), பிரபு (23), ஆகியோர் படுகாயம் அடைந்த நிலையில், அவர்கள் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். லேசான காயமடைந்த காளிதாஸ், ஷேசன் ஆகியோர் முதலுதவி சிகிச்சை பிறகு வீடு திரும்பினர். இந்த விபத்து குறித்து செல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE