சென்னை: மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருட்கள் இ-வர்த்தகம் மூலம் ரூ.24 லட்சத்துக்கு விற்பனையாகி உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள் அனைத்து தரப்பினரையும் சென்றடையும் வகையில், மாவட்ட மற்றும் மாநில அளவிலான விற்பனைக் கண்காட்சிகள், கல்லூரி சந்தைகள், மதி அனுபவ அங்காடி, சிறுதானிய உணவகங்கள், மதி விற்பனை சந்தை, இயற்கை அங்காடி, மதி நடமாடும் விற்பனை வாகனம், அடுக்குமாடி விற்பனை சந்தை போன்ற திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக இணைய வழி விற்பனையில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை விற்கும் விதமாக தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை 4 மண்டலங்களாக பிரித்து சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய மாவட்ட தலைநகரங்களில் மண்டல அளவிலான இ-வர்த்தக சேவை முகாம் சமீபத்தில் நடத்தப்பட்டது. இந்த முகாமில் அமேசான், பிஃளிப்கார்ட், மீஃசோ, இந்தியா மார்ட், ஜியோ மார்ட், பூம், ஜெம் போன்ற முன்னணி இ-வர்த்தக நிறுவனங்கள் பங்கேற்றன.
இந்த முகாம்களின் மூலமாக சுமார் 2,296 சுய உதவிக் குழு பொருட்கள் இ-வர்த்தக தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டன. தொடர்ந்து இ-வர்த்தக விற்பனையை அதிகரிக்க மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பயிற்சிகளும் அந்நிறுவனங்களின் சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இ-வர்த்தக தளங்களின் வாயிலாக இதுவரை ரூ.24.48 லட்சம் மதிப்பிலான சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
» வாட்டிய குடும்ப வறுமை: 4 வயது மகளை ரூ.40,000க்கு விற்ற பிஹார் தம்பதி - ஒடிசாவில் குழந்தை மீட்பு